போதையில் ஜீப் ஓட்டிய ஏட்டு; சிறுவன் காயம் : பெண் எஸ்.ஐ., யுடன் தகராறு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போதையில் இருந்த போலீஸ் ஒருவர், தாறுமாறாக ஜீப்பை ஓட்டி, ரகளையில் ஈடுபட்டார். திண்டுக்கல் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், டிரைவராக பணிபுரிபவர், ஏட்டு பெரியசாமி. நேற்று, திண்டுக்கல் ஆர்.எம்.,காலனியில் குடியிருக்கும் இன்ஸ்பெக்டர் சர்க்கரையை அழைத்து செல்வதற்காக, ஜீப்பில் சென்றார். வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் பெரியசாமி மது குடித்தார்.


பின், தாடிக்கொம்பு ரோட்டில் ஜீப்பை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மினிவேன் மீது மோதினார். இதில் ஜீப் சேதமடைந்ததாக, வேன் டிரைவரிடம் 2,000 ரூபாய் தருமாறு தகராறு செய்தார்; அப்பகுதியினர் அங்கு கூடினார். எஸ்.ஐ., ரங்கநாயகி அங்கு வந்தார். அவரை பார்த்ததும், பெரியசாமி ஜீப்பை எடுத்து கொண்டு வேகமாக ஓட்டி சென்றார். அப்போது, ரோட்டோரத்தில் இருந்த தள்ளு வண்டி கடையின் மீது மோதினார். இதில், கடையில் இருந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு எஸ்.ஐ., கூறினார். வரமறுத்த பெரியசாமி, எஸ்.ஐ., யிடம் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து எஸ்.ஐ., ரங்கநாயகி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். அங்குவந்த தனிப்பிரிவு எஸ்.ஐ., பழனிச்சாமி, ஏட்டு முருகன் ஆகியோர் பெரியசாமியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இப்பிரச்னையால், மாலை 5:45 முதல் 6:30 மணி வரை, தாடிக்கொம்பு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments