இரண்டு நாளில் கரைந்தது எம்.பி., கனவு: சின்னத்துரையை கவிழ்த்த வழக்கு பின்னணி

மதுரை: ராஜ்யசபா அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த போது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தும், வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவை 'பைசல்' செய்தும், 2013 நவம்பரில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது.


சென்னையை சேர்ந்த அன்பழகன் என்பவர், அப்போது தாக்கல் செய்திருந்த பொதுநல மனு: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் சின்னத்துரை, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசின் கவனத்திற்கு சென்றது. ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ராஜாமணி விசாரித்தார். நம்பியார் வடிநிலக்கோட்டம், தாமிரபரணி, கோரம்பள்ளம் பகுதிகளில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார பிரிவின் கீழ் பணி நடந்தது. இப்பணியை, மாவட்ட ஊராட்சி மேற்கொண்டதாக, 2 கோடி ரூபாய்க்கு, 'போலி' ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்ததாக, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது; நடவடிக்கை இல்லை. ஆவணங்களை அழிக்க முயற்சி நடக்கிறது. சின்னத்துரை மீது வழக்குப் பதிவு செய்து, அவரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

விசாரணையின் போது அரசு வக்கீல்,"மாவட்ட ஊராட்சித் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மற்றொரு மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் புகாரின் மீதான விசாரணை, அரசிடம் நிலுவையில் உள்ளது. விசாரணை முடிவதற்குள், மனுதாரர் எவ்வித நிவாரணமும் கோர முடியாது. மனுதாரர், இவ்வழக்குத் தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை,” என்றார். இதை பதிவு செய்துகொண்ட, ஐகோர்ட் பெஞ்ச் நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த கணேசன் என்பவரும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் 'நிதி முறைகேடு தொடர்பாக, சின்னத்துரை மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணையில் வாதிட்ட அரசு வக்கீல், "லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்கிறது. தனியாக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை,” என்றார். தனி நீதிபதி உத்தரவில், "விசாரணையின் துவக்க நிலையிலேயே, மனுதாரர் கோர்ட்டை அணுகியிருக்கத் தேவையில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது,” என, கூறியிருந்தார்.இந்த பின்னணியில்தான், சின்னத்துரைக்கு 'கல்தா' கொடுக்கப்பட்டது.

Comments