இனி சாதிப்பதற்கான விருது
கேள்வி: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர்.
எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை.
செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகிறேன்.
மக்கள் கொடுக்கும் விருதே முதன்மையானது
கே: தாமதமாக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறீர்களா?
ப: இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அடுத்த கட்டம். இந்த விருதும் அப்படித்தான்.
பாரத ரத்னா
கே: டெண்டுல்கருக்கு 25 ஆண்டு கால சாதனைக்கு பாரத ரத்னா விருது
கொடுத்துவிட்டார்கள். ஆனால் 50 ஆண்டுகள் சாதித்த உங்களுக்கு 5 இப்போதுதான்
பத்மபூஷண் விருது வழங்கியிருக்கிறார்கள்...
ப: இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளம் கேட்க கூடாது.
கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. இந்த விருதுக்கு மக்கள் என்னை
தகுதியாக்கியது மாதிரி பாரத ரத்னா விருதுக்கும் ஒரு நாள் தகுதி பெற
வைப்பார்கள்.
சமர்ப்பணம்
கே: பத்மபூஷண் விருதை யாருக்கு சமர்ப்பிப்பீர்கள்?
ப: எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்த
விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.
பொதுவாக எல்லோரும் பணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுப்பார்கள். ஆனால்
எனக்கு சம்பளம் கொடுத்து கற்றுக் கொடுத்தனர். கே.பாலச்சந்தர், சண்முகம்
அண்ணாச்சி போன்றோர் எனக்கு சம்பளம் தந்து கற்றுத்தந்தனர். இது மறக்க
முடியாத நன்றிக் கடன். தீர்க்க முடியாத நன்றிக் கடன்.
புகழ் வரும்போது
கே: விஸ்வரூபம் படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்த விருதை நினைக்கிறீர்களா?
ப: எனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனிச்சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வேன்.
ஆஸ்கர் பற்றி
கே: ஆஸ்கார் விருது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ஐ.எஸ்.ஐ. தான்
(தரச்சான்று) தேவை. அந்த நாட்டுக்கு போகும் போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும்.
தேவைப்பட்டால் போய்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப் பட்டாலோ
எனக்கு அவர்கள் தேவைப்பட்டாலோ அது நடக்கும்.
விஸ்வரூபம் 2
கே: ‘விஸ்வரூபம்-2' படம் எப்போது வரும்?
ப: படம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.
Comments