டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ., கோபம்

புதுடில்லி: 'ஆம் ஆத்மி' கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, 39, நேற்று அளித்த பேட்டியில், ''கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி. காங்., - எம்.பி.,யும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர், ஷீலா தீட்சித்தின் மகனுமான, சந்தீப் தீட்சித்தும், கெஜ்ரிவாலும் நெருங்கிய நண்பர்கள். அதனால், டில்லி அரசின் முடிவுகளில், காங்., ஆதிக்கம் செலுத்துகிறது,'' என, வெளிப்படையாகத் தாக்கி, கொந்தளித்துள்ளார்.



'பொய்யர்':

ஆம் ஆத்மி கட்சியின், லட்சுமி நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பதால், தற்போது கெஜ்ரிவாலை எதிர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில், 'கெஜ்ரிவால் ஒரு பொய்யர். மேலும் பல தகவல்களை, இனி அளிக்க உள்ள பேட்டியில் தெரிவிப்பேன்' என்றார். அதன் படி, நேற்று அவர், டில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி. இனியாவது, டில்லி மக்களை முட்டாளாக்கி வருவதை, அவர் நிறுத்த வேண்டும். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஒரு மூடப்பட்ட அறைக்குள், நான்கைந்து பேர் சேர்ந்து எடுக்கின்றனர். கத்தும் கெஜ்ரிவால் தன் கருத்தோடு, மக்கள் முரண்பட்டு கருத்து கூறினால், கெஜ்ரிவாலுக்கு கோபம் வந்து விடுகிறது. அவரை எதிர்த்து யாராவது பேசினால் கத்த ஆரம்பித்து விடுகிறார். பதவிக்கு வந்த பின், ஆம் ஆத்மி கட்சி, தனது கொள்கைகளை மறந்து விட்டு, சந்தர்ப்பவாத கட்சியாக மாறி விட்டது. பயன்படுத்தி விட்டு எறிந்து விடும் கொள்கையை கட்சி கைக்கொண்டுள்ளது. அன்னா ஹசாரே, கிரண்பேடி உள்ளிட்ட பலரை அந்த கட்சி பயன்படுத்தி சுரண்டி உள்ளது.

ஆட்சிக்கு வந்ததும்...:

தேர்தலின் போது, ஒவ்வொரு வீட்டிற்கும், 700 லிட்டர் குடிநீர் இலவசமாக கொடுப்பதாக சொன்னவர்கள், பதவிக்கு வந்த உடன், கூடுதலாக குடிநீரை பயன்படுத்தினால், முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்கின்றனர். அதே போல், மின்சார கட்டணத்தை பாதியாக குறைப்பதாக சொல்லி விட்டு, இப்போது, மாதம், 400 யூனிட்டுக்கு மிகாமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே அந்த சலுகை என்கின்றனர். சுழலும் சிவப்பு விளக்கு வண்டி களை பயன்படுத்த மாட்டோம் என்றனர். தற்போது டில்லி அரசின் அனைத்து அமைச்சர்களும், வி.ஐ.பி., என, பதிவு செய்யப்பட்ட பெரிய கார்களை பயன்படுத்துகின்றனர். டென்மார்க் பெண், பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆட்சியில் மற்றொரு கட்சி இருந்தால், ஆம் ஆத்மி கட்சி பெரிய போராட்டங்களை நடத்தியிருக்கும். டில்லி பெண்களை பாதுகாக்க என்ன செய்யப் போகின்றனர்? ஜன் லோக்பால் மசோதாவை, 14 நாட்களில் கொண்டு வருவதாக கூறினர். இன்றுடன், 19 நாட்களாகி விட்டன. 'அமைச்சர் பதவி மற்றும் லோக்சபா சீட் கோரி, நான் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றேன்' என, கெஜ்ரிவால் சொன்னது அப்பட்டமான பொய்.

உண்ணாவிரதம்:

நான் கட்சியின் உண்மையான வீரன். கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை. வரும், 27ம் தேதிக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால், நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன். இவ்வாறு, பின்னி தெரிவித்தார்.

பின்னிக்கு அறிக்கை எழுதியது பா.ஜ., தான்:

பின்னியின் குற்றச்சாட்டு குறித்து, நேற்று, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ் கூறியதாவது: பின்னிக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால், அவர் இப்படி பேசுகிறார்; அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. கட்சியின் அரசியல் விவகார குழு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும். கட்சி உறுப்பினர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒழுங்கீனத்தை அனுமதிக்க முடியாது. அவருக்கு ஏதாவது குறைகள் இருந்தால், அதை கட்சித் தலைவர்களிடம் பகிர்ந்து கொள்ள வழிகள் உள்ளன. ஆனால், கட்சி கூட்டங்களில், அவர் இதுவரை ஒரு குற்றச்சாட்டைக் கூட கூறியதில்லை. அவர், பா.ஜ., எழுதிக் கொடுத்த அறிக்கையை வாசித்திருக்கிறார் எனத் தெரிகிறது. ஏனெனில் இதே குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சியான, பா.ஜ.,வின் தலைவர், ஹர்ஷவர்த்தனும் கடந்த சில நாட்களாக பேசி வருகிறார். இவ்வாறு, யாதவ் தெரிவித்தார்.

Comments