பிரதமர் வேட்பாளர் இல்லை; பிரசார குழு தலைவர் மட்டும் தான்: ராகுல் ஏமாற்றம்

புதுடில்லி: இன்று டில்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. மாறாக பிரசார குழு தலைவராக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என அறிவித்திருந்த ராகுல் ஏமாற்றமடைந்தார்.

இந்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பணி தொடர்பாக விவாதிப்பதற்காக தலைவர் சோனியா தலைமையில் இன்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ராகுல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனினும் இதற்கு சோனியா சம்மதிக்கவில்லை. பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தும் வழக்கம் காங்கிரசில் இல்லை என்றும், பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப்பின் முடிவு செய்யலாம் என சோனியா தெரிவித்ததாக கூறினார். இந்த வழக்கத்திலேயே இந்திரா, ராஜிவ் போன்றவர்கள் பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து ராகுல் தலைமையில் தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜனார்த்தன் திவேதி தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் பேசிய ராகுல், கட்சி எந்த பொறுப்பை அளிக்க முன்வந்தாலும் அதை ஏற்கத்தயார் என்று அறிவித்திருந்தார். ராகுலின் இந்த அறிவிப்பு அவர் பிரதமர் வேட்பாளர் பொறுப்பை குறிவைப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், ராகுலை பிரசார குழுத்தலைவராக அறிவித்துள்ளதால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.

Comments