தே.மு.தி.க., - பா.ம.க.,வுடன் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: பா.ஜ.,

சென்னை: ''தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., வோடு, லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது இன்னும் முடிவாகவில்லை,'' என, பாரதிய ஜனதா தமிழக பொறுப்பாளர், முரளீதர் ராவ் கூறினார்.

சென்னை ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலர், வைகோ மற்றும் நிர்வாகிகளுடன், முரளீதர் ராவ், தமிழக பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சென்னை வண்டலூரில், பிப்., 8ம் தேதி, மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்கும்படி, வைகோவுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து, முரளீதர் ராவ் கூறியதாவது: நாடு முழுவதும் மட்டுமின்றி, தமிழகத் திலும் மோடி அலை வீசுகிறது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும். இதற்கு, வைகோவின் பிரசாரம் பெரும் துணையாக இருக்கும். தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., விரும்புகிறது. தமிழகத்தில், தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான, எந்த உறவும் இல்லை. லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணி தனிப் பெரும்பான்மை பெரும் என்பதால், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படாது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க., நிர்வாகிகள், தமிழக, பா.ஜ., நிர்வாகிகளுடன், ஞாயிற்றுக்கிழமை காலை, 10:30 மணிக்கு, பா.ஜ., தலைமையகமான கமலாலயத்தில் பேச்சு நடத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments