மீண்டும் உதயமாகிறது "அழகிரி பேரவை"- காங்கிரஸ் உடன் கூட்டணி?

சென்னை: திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் "அழகிரி பேரவை" உதயமாகி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. திமுகவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதன் தென் மண்டல அமைப்புச் செயலரும் கட்சித் தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமாகிய மு.க. அழகிரி இன்று தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த விரைந்துள்ளார். தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அழகிரி அதிரடியாக சில முடிவுகளை எடுக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...

அழகிரி பேரவை உதயம்?
 
2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலைப் போலவே எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்காக அழகிரி பேரவை என்ற அமைப்பு உதயமாகலாம்.

காங்கிரஸுடன் கூட்டணி
 
திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் அழகிரி பேரவை, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

காங்கிரஸுடன் இணக்கம்
 
மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறிய போதுகூட காங்கிரஸ் தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசியதுடன் கடைசியாகத்தான் ராஜினாமா கடிதமே கொடுத்தார் அழகிரி. அப்போது முதலே அழகிரி காங்கிரஸில் சேரலாம் எனக் கூறப்பட்டது.

கூட்டணி
 
தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அழகிரியும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் அழகிரி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மதுரை உட்பட சில தொகுதிகளில் தமது ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்தவே அதிகம் வாய்ப்பிருக்கிறதாக தெரிகிறது.

Comments