திருச்சியில்,
பா.ஜ., லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று
நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மாநில தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன்
நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., சார்பில் தேர்தல் பயிற்சி முகாம்,
திருச்சியில் துவங்கியுள்ளது. ஜனவரி, 12ம் தேதியுடன், "வீடு தோறும் மோடி,
இல்லம் தோறும் தாமரை' திட்டம் முடிகிறது.
ஜன., 12 முதல் 15ம் தேதிக்குள்,
வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க, மாவட்டந்தோறும் இரும்பு சேகரித்து, 28ம்
தேதி, சென்னையில் ஒப்படைக்கப்படும். தமிழக மீனவர்களை தாக்கும், இலங்கை
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 31ம் தேதி ராமநாதபுரம் பாம்பனில்
நடக்கும், கடல் தாமரை போராட்டத்தில், கட்சியின் அகில இந்திய நிர்வாகி,
சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார். பிப்., 15ம் தேதிக்குள், மோடி மீண்டும்
தமிழகம் வருவார். ஜன., 20 முதல் பிப்., 28க்குள், 39 லோக்சபா தொகுதிகளில்
மாநாடு நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பு வெளிவரும் சமயத்தில், அதை
எதிர்கொள்ள, பா.ஜ., 100 சதவீதம் தயாராக இருக்கும். கூட்டணிக்காக,
தி.மு.க.,விடம் கையேந்தவில்லை. "கேள்வியும் நானே, பதிலும் நானே' என,
கருணாநிதி இருப்பார். அதுபோலவே, "பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, அவரே
கூறியுள்ளார். தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிட அஞ்சவில்லை.
அதேநேரத்தில், தனியாக போட்டியிடுவோம் என, கூறவில்லை. பா.ஜ., கூட்டணியில்,
தே.மு.தி.க., சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழர்களின் உணர்வுகளை
மதித்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முடிவை விஜயகாந்த் எடுப்பார்.
Comments