'பாக்., வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்': ராணுவ தளபதி பிக்ரம் சிங் அதிரடி அறிவிப்பு

புதுடில்லி: ''எல்லை பகுதியில், பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறினால், அதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருக்க மாட்டோம். நாங்களும், விதிமுறைகளை மீறி, அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்,'' என, இந்திய ராணுவ தளபதி, பிக்ரம் சிங் கூறியுள்ளார்.

எல்லையில் கண்காணிப்பு:
இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே, 2003ல், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், பாக்., ராணுவம், இந்த ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை. அவ்வப்போது, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள, இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. கடந்தாண்டு, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவத்தின் உதவியுடன், அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், இந்திய வீரர்கள் இருவரின் தலைகளை துண்டித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில், விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தும், பாக்., ராணுவம், இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவமும், பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில், பாக்., ராணுவம், காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால், அரண்டு போன பாக்., அரசு, 'இந்திய ராணுவம், மக்கள் வசிக்கும் பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்துகிறது' என, அறிக்கை வெளியிட்டது.

இதுகுறித்து, இந்திய ராணுவ தளபதி, பிக்ரம் சிங், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய ராணுவத்தின் பொறுமைக்கும், ஒரு எல்லையுண்டு. மனித உரிமை மீறல் குறித்த பிரச்னைகளில், ராணுவம், அதிகபட்ச சகிப்புத் தன்மையை பின்பற்றி வருகிறது. ஆனால், பாக்., ராணுவம், பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைப்பதற்காக, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.

மக்கள் மீது தாக்குதல்:

இதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருக்க முடியாது. அவர்கள், விதிமுறைகளை மீறினால், நாங்களும் விதிமுறைகளை மீறுவோம். அவர்கள், சமாதானப் போக்கை பின்பற்றினால், நாங்களும், சமாதானப் போக்கை பின்பற்றுவோம். மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மீது, தாக்குதல் நடத்தியதாக, இந்திய ராணுவம் மீது, பாக்., அரசு குற்றம் சாட்டியுள்ளது. எங்கு, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் மீறப்படுகிறதோ, அங்கு, சிறிய அளவிலான போர் நிகழும். இது, வழக்கமானது தான். காஷ்மீரில், தற்போதுள்ள சூழ்நிலையில், அங்கு ராணுவ வீரர்களின் கண்காணிப்பு அவசியம். நிலைமை சீரடைந்ததும், அதற்கு பின், அரசு முடிவெடுக்கும். ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து, இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. இவ்வாறு, பிக்ரம் சிங் கூறினார்.

ஊடுருவல் முறியடிப்பு:

காஷ்மீரின், பூஞ்ச் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில், சிலர் நடமாடுவதாக, ராணுவத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் மீது, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மர்ம நபர்களும் திருப்பிச் சுட்டனர். இருதரப்புக்கும், சிறிது நேரம் சண்டை நடந்தது. பின், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபர்கள், தப்பி ஓடி விட்டதாக, ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மற்றொரு இடத்தில் ஊடுருவ முயன்ற, மூன்று பயங்கரவாதிகள், நம் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Comments