12000 மெகாவாட்:
தமிழகத்தில்,
தற்போதைய மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட்; மின் உற்பத்தி, 8,000 - 9,000
மெகாவாட்.
மின் தேவை ஆண்டுதோறும், 10 சதவீதம் உயருகிறது.வரும் கோடை
காலத்தில், மின் தேவை, 13,500 - 14,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என,
கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக, அக்டோபரில் இருந்து, வடகிழக்கு பருவ
மழைக்காலம் என்பதால், மின் நுகர்வு குறைவாக இருக்கும். தற்போது, சென்னை
உட்பட பல இடங்களில், கடும் குளிர் நிலவுகிறது; இருப்பினும், மின் நுகர்வு
குறையவில்லை.கடந்த, 7ம் தேதி, மின் தேவை, 12,600 மெகாவாட்டாக உயர்ந்தது.
மின் உற்பத்தி இதே அளவிற்கு இருந்ததால், மின் பற்றாக்குறை
ஏற்படவில்லை.வல்லூர், வடசென்னை விரிவாக்கம் மற்றும் மேட்டூர் விரிவாக்கம்
ஆகிய புதிய அனல்மின் நிலையங்களில் இருந்து, 2,250 மெகாவாட் கிடைத்ததால்,
மின் தேவை, எப்போதும் இல்லாத அளவிற்கு, 12,500 மெகாவாட்டை தாண்டியும், அதை
ஈடு செய்ய முடிந்தது.
கோடையின் தாக்கம்:
இதில்,
நீர்மின் உற்பத்தி மற்றும் காற்றாலைகளின் பங்களிப்பு முறையே, 1,000
மற்றும் 400 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.மார்ச் முதல் கோடை வெயிலின்
தாக்கம் அதிகம் என்பதால், நீர்மின் நிலையங்களில், மின் உற்பத்தி முற்றிலும்
பாதிக்கும்.புதிய அனல்மின் நிலையங்களையும் சேர்த்து, மொத்த மின் உற்பத்தி,
11 ஆயிரம் மெகாவாட்; மின் பற்றாக்குறை, 2,500 - 3,000 மெகாவாட்டாக
இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே, மார்ச் முதல், சென்னை உட்பட,
தமிழகம் முழுவதும், வழக்கத்தை விட, மின்தடை நேரம் அதிகம் இருக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம்:
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மார்ச் முதல் அக்டோபர் வரை, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், நாள்தோறும், காற்றாலைகளில் இருந்து, 2,000 - 2,500 மெகாவாட் கிடைக்கும்.ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள, வெளிமாநில தனியார் மின் நிலையங்களில் இருந்து, பிப்ரவரி முதல், 1,208 மெகாவாட் கிடைக்கும். இவற்றின் மூலம், கோடை மின் தேவையை சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments