கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன்!! -ஓவியா அதிரடி

I am ready to act as glamour says Oviyaகளவாணி ஓவியா முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தபோதும் கலகலப்பு படத்தில் கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதையடுத்து இப்போது கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கவும் தயாராகி விட்டேன் என்று கமர்சியல் டைரக்டர்களுக்கு இனிப்பு செய்தி வழங்கி வருகிறார். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ...


* களவாணி ஓவியா கவர்ச்சி ஓவியாவாக மாறியது ஏன்?

ஒரு படத்தில் நான் எந்தமாதிரி நடிக்க வேண்டும் என்பதை அந்த கதையும், கதாபாத்திரமும்தான் முடிவு செய்கிறது. அந்த வகையில், களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தேன். அதனால் கிளாமர் தேவைப்படவில்லை. ஆனால், அதன்பிறகு நடித்த கலகலப்பு படம் காமெடி என்றாலும், கவர்ச்சியும தேவைப்பட்டது. அதனால், அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அந்த நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

* ஆனால், அஞ்சலிக்கு போட்டியாகத்தான் நீங்களும் துகிலுரிந்ததாக கூறப்படுகிறதே?

அதை போட்டி என்று சொல்ல முடியாது. முதலில் கொஞ்சம் கிளாமரும இருக்கும் என்றுதான் டைரக்டர் சொன்னார். ஆனால், படப்பிடிப்பு நடந்தபோது நானே எதிர்பார்ககாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்ய வேண்டியதிருந்தது. அதோடு அப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த அஞ்சலி அதுவரை ஹோம்லியாக நடித்தவர், திடீரென்று அயிட்டம் நடிகை போன்று அதிரடி நடிகையானதைப்பார்த்து, அதே படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனாலேயே என் லிமிட்டை தாண்டி கவர்ச்சியாக நடித்தேன். அதன்பிறகுதான் நானும் கிளாமர் வேடத்துக்கு செட்டாவேன் என்பதை புரிந்து கொண்டேன். அந்த வகையில் கலகலப்பு படம் என்னை எனக்கு அடையாளம் காட்டியது.

* இருப்பினும், மார்க்கெட் பெரிதாக சூடு பிடிக்கவில்லையே?

சினிமாவைப்பொறுத்தவரை நடிக்கிற படங்களின் வெற்றிதான் அதில் நடிப்பவர்களின் மார்க்கெட் உயர்த்தும். அந்த வகையில், கலகலப்பு வெற்றி பெற்ற பிறகு நான் சில மலையாள படங்களில் நடிக்க சென்று விட்டதால், உடனடியாக தமிழ்ப்படங்களை ஏற்க முடியவில்லை. அதன்பிறகு வந்துதான் ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்தேன். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால் எதிர்பார்த்தபடி எனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

* உங்களுக்கு சிபாரிசு செய்து வந்த விமல் இப்போது கைவிட்டதேன்?

விமல் ஒருபோதும் எனக்கு சிபாரிசு செய்ததில்லை. களவாணி படம் வெற்றி பெற்றதால், அதன்பிறகு சில படங்களில் நடித்தோம். ஆனால் அதெல்லாமே தானாக வந்த வாய்ப்புகள்தான். எந்த படத்திலும் ஓவியாவை நடிக்க வையுங்கள் என்று விமல் சொன்னதே இல்லை. நாங்கள் தொடர்ந்து இணைந்து நடித்ததால் இதுபோன்ற வதந்தி பரவி விட்டது.

* உங்களைப்போன்ற கேரளத்து நடிகைகள் மலையாளத்தை விட தமிழ்ப்படங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?

தமிழ் சினிமாவில் நடித்தால் சீக்கிரமே பிரபலமாகி விடலாம். அதன்பிறகு தெலுங்கு, இந்தி படங்கள்கூட கிடைக்கும். மேலும், மலையாளத்தில் குறைவான சம்பளம்தான் தருவார்கள். ஆனால், தமிழில் அதைவிட பன்மடங்கு கிடைக்கும். அதன்காரணமாகவே மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டுகிறோம். அதுமட்டுமின்றி, தமிழில் பிரபலமாகி விட்டு மலையாளத்துக்கு சென்றால் அங்கு வரவேற்பும், மரியாதையும் அதிகமாக கிடைக்கும்.

* கோடம்பாக்கத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடவில்லையே?

என்னதான் திறமையான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் அதிர்ஷ்டம் என்பது ரொம்ப முக்கியம். அது மட்டும் இருந்து விட்டால், ஓரிரு படங்களின் வெற்றியே பரபரப்பான நடிகையாக்கி விடும். ஆனால் எனக்கு அந்த வெற்றிகள் கிடைத்தும், என்னால் என்ன காரணமோ அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை. ஒரு படி மேலே சென்றால், அடுத்து இரண்டு படி கீழே இறங்கி விடுகிறேன். என்றாலும், எதிர்காலம் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

* புலிவால் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி?

மலையாளத்தில் வெளியான சாப்பகுரிஷி என்ற படத்தில் ரீமேக்தான் இந்த புலிவால். இதில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். இதில் பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமராக நடித்துள்ளேன். மேலும், முத்தக்காட்சி உள்ளது என்று டைரக்டர் சொன்னபோது எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை. இன்றைய நிலையில், குடும்ப நடிகை என்று மார்தட்டிக்கொள்ளும் நடிகைகளே, உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்கிறார்கள். ஆனால் நான் என்னைச்சுற்றி எந்த இமேஜையும் வைத்துக்கொள்ளவில்லை. எந்த மாதிரி கதை என்றாலும் அதற்கேறப முழுசாக மாறி நடிக்கும் நடிகை என்று இமேஜில் இருப்பதால், தயங்காமல் நடித்தேன். அந்த காட்சி இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

* பெரும்பாலும் டபுள் ஹீரோயினி கதைகளாக நடிப்பதேன்?

கலகலப்பு, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, புலிவால் படங்களில் டபுள் ஹீரோயினி கதை என்றாலும், மூடர்கூடம், மதயானைக்கூட்டம் படங்களில் சிங்கிள் நாயகியாகத்தான் நடித்தேன். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ நான் சிங்கிள் ஹீரோயினாக நடிக்கிற படங்கள் தோல்வியடைந்து விடுகின்றன. அதனால் டபுள் ஹீரோயினி கதைகளுக்கே என்னை அழைக்கிறார்கள்.

* அழகை பராமரிக்க என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறீர்கள்?

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் தூங்கி விடுவேன். அதோடு, நடனம் பயிற்சி எடுப்பேன். இதற்கெல்லாம் மேலாக, வாரத்தில் ஒரு நாளாவது, நீச்சல் குளத்தில் நீந்திக்குளிப்பேன். இதனால்தான் எனது உடல் கட்டை கச்சிதமாக வைத்திருக்க உதவுகிறது. மற்றபடி டயட்ஸெல்லாம் பெரிதாக கடைபிடிப்பதில்லை. மாறாக, உடம்பில் சதை போடுவதற்காக தற்போது ஊட்டச்சத்துக்களை அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறேன்.

* ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாட வாய்ப்பு வந்தால்... ?

சினிமாவில் இப்போது பெரும்பாலும் நாயகிகளை பாடல்களுக்கு ஆடத்தான் பயன்படுத்துகிறார்கள். இரண்டு பாடல் மெலோடியாக இருந்தால், மூன்றாவது பாடல் குத்துப்பாட்டாகத்தான் உள்ளது. அந்த வகையில், இப்போது கதாநாயகிகளேதான் குத்தாட்ட நடிகைகளாகவும் மாறியுள்ளனர். அதனால் என்னைப்பொறுத்தவரை ஒரு பாட்டுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தால் மறுக்காமல் நடிப்பேன். அதேசமயம், முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஆடுவேன்.

Comments