"மக்களுக்கு அதிகாரம் கொடுத்தோம்" - ராகுல் ஆவேச பேச்சு

புதுடில்லி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் சாதாரண மக்களும் அதிகாரம் பெற்றனர். வரலாற்று புகழ் மிக்க தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் அரசை கேள்வி கேட்கும் உரிமையை கொடுத்தோம், இது யாராவது சொல்லியா கொண்டு வந்தோம். எங்களை போல் இந்த நாட்டுக்கு யாராவது ஏதாவது செய்திருக்கிறார்களா? என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்., துணை தலைவர் ராகுல் ஆவேசமாக பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: நான் பிரதமராவதை விட வேறு வகையில் நாட்டு மக்களுக்கு உழைப்பதையே விரும்புகிறேன். நமது நாட்டில் இருக்கும் வளத்திற்காக, அதிகாரத்திற்காக இதை நேசிக்கவில்லை. எதிர் கட்சியினர் எதையும் மக்களிடம் திணிப்பதில் வல்லவர்கள். வழுக்கைத் தலையர்களிடம் கூட சீப்பை விற்றுவிடுவார்கள். புதிதாக வந்திருப்பவர்கள் ( ஆம் ஆத்மி கட்சியினர்) மேலும் ஒரு படி கூடுதலாகவே செல்வர். கடுமையான போர் நம்மை எதிர்நோக்கியுள்ளது. நாம் தனி நபர்களாக இங்கு கூடியிருக்கவில்லை. ஒரு கொள்கையின் அறங்காவலர்களாக நாம் விளங்குகிறோம். அந்த கொள்கை என்னை விட, பிரதமரை விட, காங்கிரஸ் தலைவரை விட, ஏன் உங்களையே விட முக்கியமானது.

நமது அரசியல் சட்டத்தில் பிரதமரை எம்.பி.கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மோடி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல; அது மக்களின் உணர்வு.

காங்., வீரர்கள் மத்தியில் இங்கு எனக்கு பேச வாய்ப்பு கிடைத்திருப்பதை நான் பெரும் மதிப்பாக கருதுகிறேன். காங்கிரஸ் பலம் மிக்க நபர்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் அரசு இந்த நாட்டிற்கு சுயநலமின்றி பணியாற்றி வருகிறது. தகவல் உரிமை அறியும் சட்டத்தை கொண்டு வர யாரும் சொல்லவில்லை. காங்கிரசே இதனை கொண்டு வந்தது. வரலாற்று பெருமைமிக்க சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் மூலம் சாதாரண மக்கள் பெரும் பலம் பெற்றுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இந்த நாடு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. காங்கிரஸ் அரசு ஏழை மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆண்டுக்கு 12 மான்யத்துடனான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வற்புறுத்தியுள்ளேன்.

ஜனநாயகம் தனி மனிதனுக்கு சொந்தமல்ல : ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது. இந்த உலகத்திலேயே இந்தியா போன்று சிறந்து செயல்பட்டது கிடையாது. பஞ்சாயத்ராஜ் மூலம் இதனை நடைமுறைப்படுத்திய மணி சங்கர் அய்யர் இங்கே இருக்கிறார். அவரை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். கிராமங்களுக்கு கிராம மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. யாராவது இந்த நாட்டின் தேவைகளை நிறைவேற்றினாரா? ஏதாவது ஒன்றை செய்திருக்கிறார்களா? ஜனநாயகம் யாருக்கும் தனி மனிதனுக்கு சொந்தமல்ல. ஜனநாயகத்தை காண காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. சர்வாதிகாரி கையில் ஆட்சி போய் விடக்கூடாது.

ஆதார் திட்டம் என்ற மக்கள் நேரிடையாக மானியம் பெறும் வகையில் புரட்சி திட்டம் கொண்டு வந்தோம். இந்த ஆதார் மூலம் ஊழலை ஒழிக்க முடியும். ஊழலை ஒழிக்க நாம் இன்னும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவோம். நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு துணையாக இருக்கும். ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்ற விடாமல் எதிர்கட்சிகள் பார்லி.,யை ஸ்தம்பிக்க வைத்தன. தொலைதொடர்பு துறையில் புரட்சி செய்துள்ளோம். பல்வேறு வேலைவாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையை புரிந்துள்ளோம்.

இளைஞர்களுக்கே முக்கியத்துவம் : வெறுக்கத்தக்க அரசியலில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. வரும் தேர்தல் நமக்கு திருப்பு முனையாக இருக்கும். 21 ம் நூற்றாண்டு காங்கிரசில் இளைஞர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். வரவிருக்கும் தேர்தலில் அனைவரது கருத்தையும் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். நல்ல மாற்றங்கள் வரும். இதனை யாரும் தடுக்க முடியாது. வரும் 5 ஆண்டுகளில் மாற்றம் காணும் நிகழ்வாக இருக்கும். அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை கையில் வைத்துள்ளோம். வரும் தேர்தலில் பெண்கள் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும். காங்கிரசில் இவ்வாறு ராகுல் பேசினார்.

பிரதமர்ஜி என அழைப்பு: ராகுல் பேசிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மன்மோகன்சிங்கை நோக்கி ஒரு கோரிக்கையை வைத்தார். பிரதமர் ஜி என்று அழைத்தார். மக்களுக்கு வழங்கும் மான்யவிலை கேஸ் சிலிண்டர் 9 போதாது. மக்களுக்கு 12 ஆக வழங்க வேண்டும். இவ்வாறு பேசும்போது, சோனியா புன்னகைத்தார்.

Comments