புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, டீ வியாபாரி
என, கிண்டலடித்த, காங்., ராஜ்யசபா எம்.பி., மணி சங்கர் அய்யருக்கு,
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக எம்.பி.,:
காங்., கட்சியின் மாநாடு நேற்று டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற, காங்., ராஜ்யசபா எம்.பி.,யும், தமிழகத்தை சேர்ந்தவருமான, மணி சங்கர் அய்யர் பேசியதாவது: நாட்டின் பிரதமராக போவதாக, நரேந்திர மோடி, கனவு கண்டு வருகிறார். ஆனால், அவரால், எப்போதுமே, இந்த நாட்டின் பிரதமராக முடியாது என, உறுதியாக, என்னால் கூற முடியும். அவர், அரசியலுக்கு வருவதற்கு முன், டீ விற்பனை செய்தவர். எனவே, அவர் விரும்பினால், இங்கு டீ விற்பதற்கு, அவருக்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். இவ்வாறு, மணிசங்கர் அய்யர் பேசினார்.
மணிசங்கர்
அய்யரின் பேச்சுக்கு, பா.ஜ.,வில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கூட்டணி
கட்சியினரிடமும், கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து, காஷ்மீர்
முதல்வரும், காங்., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேசிய மாநாட்டு கட்சியின்
தலைவர்களில் ஒருவருமான, ஒமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:
நம்மிடம் இல்லை:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம், எதிர்மறையான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், நம்மைப் போன்ற தலைவர்களிடம் இல்லாத, சாதகமான ஒரு அம்சம், அவரிடம் உள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து, அரசியலுக்கு வந்தவர் என்பது தான், அந்த அம்சம். எளிமையான பின்னணியில் இருந்து வந்து, அரசியலில் பெரிய அளவில் உயர்ந்தது, அவரின் பலம். இந்த எளிமையான பின்னணியை கிண்டல் செய்வது, காங்கிரசின் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு, எந்த வகையிலும் உதவாது. இவ்வாறு, ஒமர் அப்துல்லா, சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
Comments