தமிழக பா.ஜ., தலைமையகமான கமலாலயத்திற்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ
நேற்று சென்றார். தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வண்டலூரில், பா.ஜ.,
பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக,
பா.ஜ., தலைவர்களுடன், அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில், பா.ஜ., ம.தி.மு.க., கூட்டணி உறுதியாகியுள்ளது. அதனால், ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகத்திற்கு, பா.ஜ., தலைவர்கள், சமீபத்தில் சென்று அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தினர். இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைமையகமான, கமலாலயத்திற்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று சென்றார். அவருடன் துணை பொதுச்செயலர், மல்லை சத்யா, பொருளாளர் மாசிலாமணி, மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், ஜீவன், தேர்தல் பிரிவு செயலர், கழககுமார் உட்பட, பலர் சென்றனர்.
அங்கு, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், வைகோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ., அலுவலகத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா சிலைக்கு, வைகோ மலர் தூவி வணங்கினார்.பின், பா.ஜ., அணியில் தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெறுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், அடுத்த மாதம், 8ம் தேதி வண்டலூரில் மோடி பங்கேற்கும், பா.ஜ., பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், பா.ஜ., தலைவர்களுடன், வைகோ முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பேச்சில், பா.ஜ., தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், கே.என்.லட்சுமணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மோகன்ராஜூலு கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின், நிருபர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: அடுத்த மாதம், 8ம் தேதி, வண்டலூரில், நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசித்தோம். 1998, 1999ம் ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம். 2004ல் தவிர்க்க முடியாத காரணங்களால், கூட்டணியில் இருந்து விலகினோம்.ஆனாலும், குறிப்பிட்ட ஒரு கட்சியால், கமலாலயம் தாக்கப்பட்ட போது, ம.தி.மு.க.,வினருடன் வந்து, பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேசினோம். அந்தளவுக்கு எங்களுக்குள் தொடர்பும், நட்பும் இருக்கிறது.திருச்சியில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம், வட மாநிலங்களில், தாக்கத்தை ஏற்படுத்தியது. வண்டலூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். மோடி பங்கேற்கும் கூட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவில், ம.தி.மு.க., சார்பில் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, டி.ஆர்.செங்குட்டுவன், கழககுமார் உட்பட, ஐந்து பேர் இடம் பெறுவர். இந்தக் குழுவினர், பா.ஜ., ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றுவர்.இவ்வாறு வைகோ கூறினார்.
அகில இந்திய பா.ஜ., செயலர் முரளீதர் ராவ் கூறுகையில், ""நாடு முழுவதும் மோடி அலை வீசுவதை போல், தமிழகத்திலும் நல்ல அறிகுறி தென்படுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழகத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமாக பெற்றி பெறும்,'' என்றார்.
Comments