
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான
நரேந்திர மோடிதான் குஜராத் கலவரத்துக்கு பொறுப்பு.. அவரை கண்டு
அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவோ அல்லது ராகுல் காந்தியோ பொதுவாக
அக்குடும்பத்தினர் யாரும் தொலைக்காட்சிகளில் தனிப்பட்ட முறையில் பேட்டி
கொடுப்பது இல்லை.
ஆனால் இப்போது அந்த இறுக்கத்தை தளர்த்து டைம்ஸ் நவ்
தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ராகுல்
காந்தி பேட்டி அளித்திருக்கிறார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியில்
முக்கிய அம்சங்கள்:
எனக்கு கடினமான, சவாலான விஷயங்களை எதிர்கொள்வது பிடிக்கும். யார் பிரதமர்
என்பதை காங்கிரஸ் கட்சி எம்.பிக்களே தீர்மானிப்பர்.
என் பாட்டி, என் அப்பாவின் மரணத்தை பார்த்த எனக்கு அச்சம் என்பது இல்லை.
நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த அச்சப்படவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும். ஆயிரக்கணக்கானோர்
படுகொலைக்கு காரணமானவர் மோடி என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசியது சரியே
2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு அப்போது முதல்வராக இருந்த மோடிதான்
பொறுப்பு. 2002 குஜராத் வன்முறையில் மோடி அரசு ஈடுபட்டதை பொதுமக்கள் நேரில்
பார்த்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டு.
ஆனால் 1984 சீக்கியர் படுகொலையும் 2002 குஜராத் கலவரமும் வேறு வேறானவை.
இந்திரா படுகொலைக்காக ஒரு சமூகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்தவில்லை.
1984 சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் அரசு தடுக்க முயற்சித்தது. ஆனால்
2002ல் குஜராத் படுகொலையை மோடி அரசு நிகழ்த்தியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வர வேண்டும்
என்பதில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். ஊழல் விவகாரத்தில் யார் தவறு
செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் -ராகுல்
Comments