மும்பை: சீனாவுடன் 1961ல் நடைபெற்ற போரில் உயிர் நீத்த வீரர்கள்
நினைவாக. லதா மங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர
மோடி ஏக்கத்துடன் நிகழ்த்திய உரை வருமாறு: நாட்டிற்காக உயிர் நீத்த
வீரர்களுக்காக காஙகிரஸ் அரசு, ஒரு போர் நினைவுச் சின்னத்தை இதுவரை
ஏற்படுத்தவில்லை.
அந்த நல்ல பணியை எனக்காக அவர்கள் விட்டு
வைத்திருக்கிறார்கள் போலும். போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை
கவுரவிப்பதற்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு
இந்தியாதான் என்பது வேதனையான விஷயம். தற்போதைய நிலையில், அடுத்து வரும்
பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே
தோன்றுகிறது. ( அப்போது கூட்டத்தினர், மோடியைக் கொண்டு வாருங்கள்;
நாட்டைக் காப்பாற்றுங்கள் என் முழங்கினர்).
நேரு முன் பாடப்பட்ட பாடல்
:
கவி பிரதீ்ப் எழுதிய இந்த பாடலை, சி.ராமச்சந்திரா இசையமைக்க, 1963, ஜனவரி
27ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர்
பாடினார். லதா மங்கேஷ்கர் தற்போது கடந்த காலத்தை நம்முடன் இணைத்துள்ளார்.
நேர முதலில் கேட்ட பாடலை நாமும் இப்போது கேட்பது நமக்கு கிடைத்த
அதிர்ஷ்டமாகும்.
ஒரு ராணுவ சக்தியாக விளங்கும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது; இந்தியா
முடிவு செய்தால், சரியான தலைமையும், கொள்கைகளும் இருந்தால், 10 ஆண்டுகளில்
இந்தியா இதர நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும். போர் வீரர்களையும்
தியாகிகளின் குடும்பத்தினரையும் கவுரவிப்பதென்பது, நாட்டிற்காக சுயநலம்
இல்லாமல் தியாகம் செய்த அனைவரையும் கவுரவிப்பதாகும் என்றார்.
ஆயுதப்படை வீரர்களே பெருமளவில் பங்கேற்ற இந்த நிகழ்வில், அவர்களுக்காக
மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவியுள்ள படைவீரர்களுக்காகவும் மோடி
பேசினார். போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று உறுதி கூறியதோடு,
சமீபத்தில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தானிய ராணுவம் துண்டித்தது,
சீனாவின் சைபர் தாக்குதல், ஆயுதங்கள் வாங்குவதற்கு போதிய நிதி ஒதுக்காமை
போன்ற விஷயங்களையும் மோடி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி, தேச பக்தி பாடல்களுட்ன துவங்கியது. மோடியும் லதாவும் மேடைக்கு
வந்ததும், தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். 26/ 11ல் நடைபெற்ற மும்பை
தாக்குதலில் போராடி உயிர் நீத்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும் மோடி
பாராட்டு தெரிவித்தார். எல்லையில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும்,
அவர்களை தியாகம் செய்ய அனுப்பிய அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்த
நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து, மோடியும் அந்த பாடலைக்
கண்ணீர் விட்டபடியே பாடினார். லதா மங்கேஷ்கர் பேசுகையில், இந்த நிகழ்வுக்கு
அரசியல் சாயம் பூசக்கூடாது; மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுத்த, நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு என்னுடைய நன்றி என்றார். கடந்த
நவம்பரில் புனேயில், தன்னுடைய தந்தை நினைவாக கட்டப்பட்ட மருத்துவ மனை
திறப்பு விழாவில் லதா மங்கேஷ்கர் பேசுகையில், நரேந்திர மோடி பிரதமராக
வேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் என்று
பேசினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பல விமர்சனத்திற்குள்ளானது.
Comments