ஜில்லா படத்தின் மதுரை, ராம நாதபுரம் வெளியீட்டு உரிமை பெற்ற
விநியோகஸ்தர், வேண்டுமென்றே விலையை ஏற்றி வைத்து, வீரம் படத்துக்கு சாதகமாக
செயல்படுவதாகவும், இதனால் ஜில்லாவுக்கு கிடைக்க வேண்டிய தியேட்டர்கள்
கிடைக்காமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள விநியோகஸ்தர் பெயர் மணிகண்டன்.
நெல்லையைச் சேர்ந்தவர். வழக்கமாக மதுரை - ராமநாதபுரம் விநியோக உரிமையை
மதுரையைச் சேர்ந்த அன்பு, அழகர், தங்கரீகல் ரமேஷ் போன்றவர்கள்கள்தான்
பெறுவது வழக்கம்.
ஆனால் ஜில்லாவை நெல்லையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு விற்றிருக்கிறார்கள்.
விஷயம் தெரிந்த அஜீத் ரசிகர்கள் (முன்னாள் நிர்வாகிகள்) சிலர், மதுரை -
ராமநாதபுரம் ஏரியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் ஜில்லா படமே
வெளியாகக் கூடாது என கேட்டுக்கொண்டு, அதற்கான இழப்பீட்டையும் தருவதாகக்
கூறியுள்ளார்களாம்.
இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள அரங்குகள் ஜில்லாவை திரையிட கேட்டபோது மிக
அதிக விலை சொன்னாராம் மணிகண்டன். இதனால் பல ஊர்களில் உள்ள அரங்குகளில்
வீரம் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜில்லா கன்பர்ம் ஆகவில்லை!
தேவகோட்டையில் அருணா, லட்சுமி என இரு அரங்குகள் உள்ளன. இவற்றில்
லட்சுமியில் வீரம் வெளியாகிறது. அருணாவில் ஜில்லாவை வெளியிட முயன்று, விலை
கட்டுப்படியாகாததால், அதையும் வீரம் அல்லது கலவரம் படத்துக்குத் தர முடிவு
செய்துள்ளார்களாம்.
மானாமதுரையிலும் இரு அரங்குகள்தான். இங்கு சீனிவாசா அரங்கில் வீரம்
வெளியாகிறது. பரிமளாவில் ஜில்லா வெளியாகவில்லை. மேலே சொன்ன அதே காரணம்தான்.
சின்னமனூரில் உள்ள வெங்கடேஸ்வராவில் வீரம் வெளியாகிறது. ஜில்லா வெளியாக
வேண்டிய பாரத் அரங்கம், வெறிச்சோடிக் கிடக்கிறது.
வத்தலகுண்டுவில் கோவிந்தசாமி, பரிமளம் என இரு அரங்குகள். இவற்றில்
கோவிந்தசாமியிவ் வீரம் வெளியாகிறது. இன்று பிற்பகலுக்குள் ஜில்லாவை
தராவிட்டால் பரிமளத்திலும் வீரம் அல்லது கலவரம் வெளியாகும் என
அறிவித்துவிட்டார்கள்.
இப்படி பல நகரங்களிலும் ஜில்லாவுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையை
உருவாக்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம் வீரம் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர், மதுரை போன்ற பெரிய
நகரங்களில் அதிக அரங்குகளை வீரம் படத்துக்குப் பிடித்து வைத்துள்ளார்களாம்.
ஜில்லா வெளியாக வேண்டிய அரங்குகளையும் வீரம் படத்துக்கே ரிசர்வ்
செய்துள்ளனர்.
வழக்கமாக தங்களுக்கு வரவேண்டிய ஜில்லா உரிமை, நெல்லை பகுதிக்காரருக்குப்
போன கோபத்தில் அவர்கள் இப்படிச் செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள்
கூறுகின்றனர்.
தலைவாவுக்குப் பிரச்சினை தலையாய இடத்திலிருந்து வந்தது. ஆனால்
ஜில்லாவுக்குப் பிரச்சினை, ஜில்லா லெவலிலேயே கிளம்பி இப்போது படத்தின்
வசூலுக்கே வேட்டு வைக்கும் போலிருக்கிறது!
Comments