பதக்கம் வென்றது "டீ' ஆற்றதானா : பரிதாபத்தில் மதுரை சர்வதேச வீரர்

மேலூர் : சர்வதேச அளவில் இறகு பந்து போட்டியில், பதக்கங்களை வென்ற வீரர், வறுமை காரணமாக மதுரை கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

மேலூர் அருகே உள்ள அ.வல்லாள பட்டியை சேர்ந்தவர் இளஞ்செழியன்,33. இவரது தந்தை தங்கராஜ் பல ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. தாயார் நாச்சம்மாள், இரு சகோதரிகள், ஒரு சகோதரருடன் வாழ்ந்து வருகிறார்.
இவரது ஒன்றாவது வயதில் வலது கால், போலியோவால் பாதிக்கப்பட்டு செய லிழந்தது. விடா முயற்சியுடன் அவ்வூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, அதே கிராமத்தில் தட்டி வேய்ந்த ஒரு டீக்கடை வைத்து பிழைக்க ஆரம்பித்தார். மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடப்பதை அறிந்த இவர், இறகு பந்து விளையாட பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். 1998ல் முதல் முறையாக மாவட்ட அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றிகள் குவிய, மாநில அளவு போட்டிகளில் விளையாடினார்.

தேசிய அளவில் நடந்த போட்டியில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் 17 முறை கலந்து கொண்டு, 8 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை வென்றார். அதைதொடர்ந்து, 5 முறை சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார். சர்வதேச போட்டியில் 2002ல் வெண்கல பதக்கம் வென்ற இவர், 2007ல் வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்றதும் பாராட்டுபவர்கள், அதன் பிறகு மறக்கப்பட்டு விடுவார்கள். அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இளஞ்செழியன்.

அவர் கூறியதாவது : விளையாட்டில் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லை. டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான், எனது தாயார் மற்றும் சகோதரரை காப்பாற்ற வேண்டும். 2013ல்சென்னையில் நடந்த தேசிய போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றேன். அப்போது அரசு வேலைக்கு சிபாரிசு செய்வதாக கூறப்பட்டது, அது அத்துடன் சரி. கடந்த நவம்பரில் ஜெர்மனியில் நடந்த உலக போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தேன். பணம் இல்லாததால், அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.என்னால் முடியாததை மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்து நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். நண்பர்கள் உதவியுடன் ஒரு இடத்தை தேர்வு செய்து, அவர்கள் கொடுத்த சிறு பணத்தை வைத்து சிறு விளையாட்டு அரங்கம் தயார் செய்துள்ளேன். இங்கு பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதமாக இலவசமாக இறகு பந்து குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். வறுமை காரணமாக நான் சென்று விளையாட முடியாத இடங்களுக்கு, என்னால் பயிற்சி பெறும் மாணவர்கள் சென்று, கட்டாயம் பதக்கங்களை வென்று நமது தேசத்திற்காக குவிப்பார்கள், என்றார். "வறுமையிலும் செம்மை' என்பதற்கு இலக்கணமாக திகழும் இளஞ்செழியனை பாராட்ட, உதவ 97510 60749.

Comments