ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து நீடிப்பது குறித்து அம்மக்களிடம்
பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரசாந்த் பூஷனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து
அமைப்புகள் ஆம் ஆத்மி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
தாக்குதலும் நடத்தப்பட்டது.
பின்னர் மற்ற கட்சி தலைவர்களைப் போலவே, அரவிந்த் கேஜ்ரிவாலும் அது
பிரசாந்த் பூஷனின் சொந்த கருத்து.. கட்சியின் கருத்து இல்லை என்று விளக்கம்
அளித்தார்.
இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் டெல்லி எம்.எல்.ஏ. வினோத் பின்னி கட்சி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்...
டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற தவறிவிட்டது. ஆம் ஆத்மி அரசின் நிர்வாகம் மோசம் என்று
விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த வினோத் பின்னி 2011-ல் ஆம் ஆத்மியில்
இணைந்தார். டெல்லியில் அரசு அமையும் நிலையில் தமக்கு கேபினட் அமைச்சர் பதவி
கேட்டிருக்கிறார். கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனாலேயே வினோத் பின்னி
கலகக் குரல் எழுப்புகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால்,
வினோத் பின்னி லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் தற்போதைய
எம்.எல்.ஏக்கள் எவருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
தரமாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.. இந்நிலையில் வினோத் பின்னி
அடுத்த என்ன செய்வார் என்ற பரபரப்பு ஆம் ஆத்மியில் இருந்து வருகிறது.
இதேபோல் ஆம் ஆத்மியில் கடந்த வாரம் இணைந்த நாட்டியக் கலைஞர் மல்லிகா
சாராபாய், ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான குமார் விஸ்வாஸை மிகக் கடுமையாக
விமர்சனம் செய்து வருகிறார்.
ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ், மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டு
புகழ்ந்ததாக குறிப்பிட்டு சாடியிருக்கிறார் மல்லிகாசாராபாய். குஜராத்தில்
பாஜகவுக்கு மாற்று ஆம் ஆத்மி என்று தான் நம்புகிறேன் எனக் கூறிதான்
கட்சியில் இணைந்தார் மல்லிகா சாராபாய். இணைந்த ஒருவாரத்திலேயே கட்சியின்
மூத்த தலைவருடன் மல்லுக் கட்டுகிறார் சாராபாய்..
இந்த களேபரங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி கட்டுப்பாடுமிக்க கட்சியாக
ஆம் ஆத்மியை உருவாக்குவாரா கெஜ்ரிவால்? அல்லது கலகலக்க வைப்பாரா?
என்பதுதான் பிற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Comments