பேட்டி அளிக்காமல் ஸ்டாலின் "எஸ்கேப்': தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சென்னையில் இருந்து நேற்றிரவு கோவை வந்தார். அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக, அவரிடம் பேட்டி எடுப்பதற்காக, செய்தியாளர்கள் காத்திருந்தனர். இரவு8.35மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேவந்த ஸ்டாலின், செய்தியாளர்களிடம் ஒருவார்த்தைகூட பேசாமல், வேகவேகமாக காரில் ஏறிச்சென்றார்.
'அதிக பலத்துடன் தொண்டர்கள்' நீக்கத்திற்கு பின் அழகிரி பேட்டி:''என்னை கட்சியை விட்டு நீக்கியதற்கு பின் தான், புது தெம்பு வந்து, அதிக பலத்துடன் தொண்டர்கள் உள்ளனர்,'' என, மு.க.அழகிரி கூறினார்.
நமது நிருபருக்கு, அவர் தொலைபேசியில் அளித்த பேட்டி:
காரணம் தெரியாது:
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, நீங்கள் நீக்கப்பட்டதற்கு காரணம்?
ஏன் நீக்கினர் என எனக்குத் தெரியவில்லை. நான், ஹாங்காங் சென்றேன். அத்தகவலை கட்சித் தலைமைக்கு தெரிவிக்கவில்லை என, நினைக்கிறேன். அதனால் கூட, என்னை நீக்கியிருக்கலாம். (சிரித்துக்கொண்டே) இக்கட்சி, 'ஜனநாயக கட்சி'யல்லவா?
ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான தீண்டாமை வழக்குகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா?
ஏங்க... இதுக்கும், எனக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும். ஒருவர் ஜாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும் போது, புகார் தான் செய்வார். உங்களை திட்டினா நீங்க சும்மா இருப்பீங்களா?
30ம் தேதி முக்கிய முடிவு:
தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...
என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின், என் தொண்டர்கள் இன்னும் அதிக பலத்துடன் உள்ளனர். என் நிலைப்பாடு குறித்து, ஜன., 30ல், மதுரையில் நடக்கும் பிறந்த நாள் விழாவில் தெரிவிப்பேன்.மதுரைக்கு, ஜன., 26ல் வருகிறேன். அங்கு, என் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அது வரை அமைதியாக இருக்க வலியுறுத்தியுள்ளேன்.இவ்வாறு, அழகிரி கூறினார்.
Comments