புதுடில்லி: டில்லியில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் மக்கள் குறைகேட்டு 'ஜனதா தர்பார்'- நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு
செய்திருந்தார். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் மனு கொடுக்க வந்ததால் நெரிசல்
மற்றும் குளறுபடி ஏற்பட்டது. பலர் தடுப்புக்களை தள்ளி விட்டு நுழைந்ததால்,
பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து
வருகிறது. இதன்படி வாரம்தோறும் சனிக்கிழமை தலைமை செயலகம் முன்பு முதல்வர்
உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்களிடம் நேரடியாக மனுக்கள் வாங்கப்படும்.
என்று அறிவித்திருந்தார்.
இதற்கான நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி மாணவர்கள்,
மாணவிகள், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், குடி
நீர் வாரியதுறை ஊழியர்கள் என பல தரப்பினரும் இன்று காலையில் தலைமை செயலகம்
நோக்கி படையெடுத்து வந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்றனர்.
முதல்வர் உள்பட 6 அமைச்சர்களும் மேஜை போட்டு அமர்ந்தபடி மனுக்கள் வாங்கி
கொண்டிருந்தனர். கூட்டம் கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் வரிசையில்
இருந்து விலகினர். முதல்வர், அமைச்சரை நெருக்கி பணி செய்ய முடியாத அளவிற்கு
போனது. தடுப்பு வேலிகள் தள்ளி விடப்பட்டது.
நிலைமை மோசமானதை அடுத்து முதல்வர் அங்கிருந்த கிளம்ப வேண்டிய சூழல்
ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து கெஜ்ரிவாலை
பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில்: நிகழ்ச்சியில் ஏற்பட்ட
குறைபாட்டை ஒத்து கொள்கிறேன். தொடர்ந்து அங்கு இருந்தால் தேவையற்ற நெரிசல்
ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தினால் நான் மனு வாங்கும் நிகழ்ச்சியை பாதியில்
முடித்து கொண்டேன். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்பாடுகள் செய்யப்படும்.
சில நாட்களுக்கு ஜனதா தர்பார் நிகழ்ச்சி ஒத்தி போடப்படுகிறது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
எதிர்பார்ப்பு அதிகம்: முதல்வர் மனு வாங்குவதாக அறிவித்ததும் டில்லி
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இதனால் பலர் தங்களின்
குறைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களுடன் வந்து விட்டனர். மனு கொடுக்க வந்த
ஒரு பெண் கூறுகையில்: பெண்களுக்கு எதிராக எது நடந்தாலு<ம் என்னிடம்
தெரிவிக்கலாம் என்றதால் நாங்கள் ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் இப்போது மனுவை
வாங்க யாருமே இல்லாமல் போய் விட்டனர். இது எங்களுக்கு ஏமாற்றத்தை
அளிக்கிறது என்றார். ஒரே நேரத்தில் அனைவரது குறைகளை தீர்க்க முடியுமா
என்பது கேள்விக்குறிதான் !
Comments