பொருளாதார தேக்கத்திற்கு அதிகாரிகள் பயம் காரணமாம்: பிரதமர் மன்மோகன் சிங்

புதுடில்லி: ''நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, முக்கிய திட்டங்கள் மீதான அதிகாரிகளின் அனுமதி கிடைக்காதது தான் காரணம். மத்திய கணக்கு தணிக்கையாளர் மற்றும் மத்திய விஜிலென்ஸ் குழு ஆகியோர் மீதான பயமே, திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் அதிகாரிகளைத் தடுத்து விட்டது,'' என, காங்., பொதுக்குழு கூட்டத்தில் நேற்று, பிரதமர், மன்மோகன் சிங் பேசினார். இதன் மூலம், பிரதமரான தன்னால், அமைச்சர்களின் ஊழலைத் தடுத்து நிறுத்த இயலவில்லை என்பதை, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுஇருக்கிறார்.



காங்., பொதுக்குழு கூட்டம்:

டில்லியில் நேற்று, காங்., பொதுக்குழு கூட்டம் கூடியது. நாடு முழுவதிலும் இருந்து கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், சோனியா, ராகுல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
அதில், பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது: கடந்த ஒன்பதாண்டு, காங்., ஆட்சி, தகுதி இருந்தும் மக்களிடம் இருந்து பாராட்டைப் பெறவில்லை. இவ்வளவுக்கும், கடந்த ஒன்பதாண்டுகளில், உலகளவில் இரண்டு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. இருந்தும், இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி, 7.9 சதவீதமாக நீடிக்கிறது. பொதுமக்கள், ஆதாரங்களையும், பிறர் பேசுவதையும் ஒப்பிட்டு, காங்., ஆட்சியை மதிப்பிட வேண்டும். சமீபத்திய தேர்தல் முடிவுகள், தொய்வைத் தந்திருக்கின்றன. ஆனாலும், ராகுல் தலைமையில், வரும் லோக்சபா தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில முக்கியமான உள்நாட்டு காரணிகள் தான், நாட்டின் பொருளாதார மந்தத்திற்கு காரணம் என்பதை, ஒப்புக் கொள்கிறேன். உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மத்திய ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மத்திய கணக்கு தணிக்கையாளர் ஆகியோர், தங்கள் முடிவுகளின் மீது, கேள்விகள் கேட்பர் என்ற பயத்தினால், அதிகாரிகள் அந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கினர்.

சட்டப்படி நடவடிக்கை:

இருந்தும், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அமைச்சரவை அனுமதி அளித்து விட்டது. ஊழல் தொடர்பான பிரச்னை களில் சட்டப்படி நடவடிக்கை கள் எடுக்கப்படும். தற்போது, '2ஜி' அலைக்கற்றை மற்றும் நிலக்கரி விற்பனை ஆகியவை, ஏலம் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன. அதனால் எதிர்காலத்தில், அந்த துறைகளில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது உண்மை தான். அதே நேரம், உணவு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை, உற்பத்தி செய்வோர், கணிசமான அளவில் லாபம் பெறுகின்றனர் என்பதும், மக்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்து உள்ளது என்பதும் உண்மையே.
வெற்றி பெறுவோம்:

வரும் லோக்சபா தேர்தலுக்கு நாம் தயாராகி, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றால், லோக்சபா தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். கட்சி துணைத் தலைவர் ராகுலின் பணிகள், கட்சியில் புது உற்சாகத்தையும், சக்தியையும் உருவாக்கும். வரும் நாட்களில், நாம் மேலும் உயர்நிலையை அடையப் போகிறோம். ராகுல் தலைமையில் நாம், வரும் லோக்சபா தேர்தலில் அணி வகுப்போம் என்பதில், எனக்கு சந்தேகமே இல்லை. இவ்வாறு பிரதமர், மன்மோகன் சிங் பேசினார்.

Comments