மதுரையை பொறுத்தவரை தி.மு.க., வில் ஸ்டாலின், அழகிரி என கோஷ்டிகளாக
செயல்பட்டு வந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்தும் கட்சி கூட்டத்தில்
அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்பதில்லை. சில இடங்களில் இரு தரப்பினரும்
மோதிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கட்சியின் செயற்குழு,
பொதுக்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை. இது குறித்தும் விமர்சனம்
எழுந்தது. நான் எப்போதும் இது போன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்
என்றார். சில நாட்களுக்கு முன்னர் கூட போட்டி பொதுக்குழுவை கூட்டப் போவதாக
கட்சிக்கு முணுமுனுப்பு இருந்து வந்தது. திருச்சியில் கூட சுவரொட்டி
ஒட்டப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச்- 1 ம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள்
கொண்டாடவிருந்தது. இதற்கான விளம்பரங்களில் அழகிரியின் பெயர், பெயரளவில் கூட
இடம் பெறவில்லை. மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வந்தது.
இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கழக அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
கட்டுப்பாட்டை குலைப்பதா ? தலைவர்
கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை மீறி கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும்
வகையில் சிலர் நடப்பதால் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., அமைப்பு
கலைக்கப்படுகிறது. இதன்படி பகுதி கழகம், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும்
பதவி இழக்கின்றனர். முறைப்படி அமைப்பு தேர்தல் நடைபெறும்வரை கட்சியை
வழிநடத்த தற்காலிக பொறுப்புக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கு
கோ.தளபதி தலைமை வகிப்பார். இவரது தலைமையின் கீழ் முன்னாள் எம்.எல்.ஏ.,
வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, ஜெயராம், பாக்கியநாதன், சேது
முத்துராமலிங்கம், சின்னம்மாள் ஆகியோர் பொறுப்பு குழுவில் இடம்
பெறுகின்றனர். இந்த குழுவினர் கட்சியை வழிநடத்தி செல்வர். இவ்வாறு அன்பழகன்
கூறியுள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழுவினர் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை அடுத்து அழகிரி ஆதரவாளர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரு அணிகள் இடையே இருந்த கோஷ்டி மோதல் வெட்ட வெளிச்சமாக வெடித்துள்ளது.அடுத்து மதுரை தி.மு.க.,வில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Comments