பாலத்தில் மட்டும் செல்லலாமா? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில், அங்கம் பெற வேண்டும் என்று, கம்யூனிஸ்ட்கள் தான், நாள்தோறும் கவலைப்படுகின்றனர். ஜெயலலிதாவோ, "நாற்பதும் நமதே' என, முழங்குகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட, புதிய தலைமைச் செயலகத்தை, பல கோடி ரூபாய் செலவு செய்து, மருத்துவமனையாக மாற்றுகிறார்.
"கருணாநிதி மீது உள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பால், ஜெயலலிதா இப்படி செய்கிறார்' என, பலரும் தெரிவித்து விட்டனர்.ஆனால், ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவில்லை. புதிய தலைமைச் செயலகத்தை வெறுப்பவர், சென்னை மியூசிக் அகாடமி அருகே உள்ள, பாலம் வழியாக, தலைமைச் செயலகம் செல்கிறார். "தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது' என, அந்த பாலத்தில் செல்வதைத் தவிர்ப்பாரா?

சட்டசபையில் கவர்னர் உரை என்பது, அரசின் கொள்கை உரை, இதை தயாரிக்க, அரசு செயலர்களுடன் ஆலோசித்துத் தயாரிக்க, ஒரு மாதமாகும். ஆனால், சட்டசபை, 30ம் தேதி கூடுகிறது. முதல்வர் நேற்று தான், கொடநாட்டிலிருந்து திரும்பியுள்ளார்.சென்னையில், கொசுத் தொல்லையை ஒழிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். மாநகரில் உள்ள குப்பையை அகற்றினால், கொசுத் தொல்லை ஒழியும்; ஆனால், இதை செய்யவில்லை.முதல்வரை சந்திக்க, மார்க்சிஸ்ட் தலைவர்கள், கொடநாடு செல்கின்றனர். "அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம்' என, கம்யூனிஸ்ட்கள் நாள்தோறும் சொல்கின்றனர். ஆனால், "நாற்பதும் நமதே' என, முதல்வர் அறிவிக்கிறார். தமிழக அரசு, செய்தி வெளியீடு, காணொலி காட்சிகள், "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் தான் நடக்கின்றன.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Comments