ஊழல்:
தற்போதைய
லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, இன்னும் சில மாதங்களில்,
லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும்
காங்., கூட்டணி அரசு, பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ளதால், மக்கள் மத்தியில்
காங்., மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில
சட்டசபை தேர்தல் முடிவுகள், இதை தெளிவாக பிரதிபலித்தன. டில்லி மாநிலத்தில்,
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்., எதிர்க்கட்சி வரிசையில்
அமர்வதைக் கூட விரும்பாத வாக்காளர்கள், மூன்றாவது இடத்திற்கு
துரத்தியுள்ளனர்.மத்திய அரசின், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரிச்
சுரங்க ஊழல் போன்றவை மட்டுமின்றி, காங்., ஆளும் மாநிலங்களிலும் தொடர்ந்து
ஊழல் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.மகாராஷ்டிராவில், ஆளும் காங்.,
அரசு மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. கேரளாவில்
சூரிய சக்தி மின் பேனல் மோசடி யில் பல காங்., தலைவர்களும் சிக்கித்
தவிக்கின்றனர். தொடர் சறுக்கல்களால் காங்., பீதி அடைந்துள்ளது.
ராகுல் பிரதமர் வேட்பாளர்:
ஏற்கனவே,
நாடு முழுவதும் வீசும், நரேந்திர மோடி அலையை சமாளிக்க முடியாமல் தவிக்கும்
காங்கிரசுக்கு, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் பெரும்
சவாலாக உருவெடுத்துள்ளார்.காங்., துணைத் தலைவர் ராகுல், பல இடங்களில்
ஆவேசமான பிரசாரத்தில் ஈடுபட்டாலும், மக்களிடம், பெரிய அளவில், அவரால்
செல்வாக்கு பெற முடியவில்லை. எனவே, சோனியாவின் மகளும், ராகுலின்
சகோதரியுமான, பிரியங்காவை, லோக்சபா தேர்தலுக்கான முக்கிய பிரசார பீரங்கியாக
பயன்படுத்த காங்., திட்டமிட்டுள்ளது. பிரியங்காவின் அரசியல் பிரவேசம்
வரும் லோக்சபா தேர்தலில் தீவிரப்படுத்தப்படும் என்றும் பேசப்படுகிறது.
வரும், 17ம் தேதி நடைபெறவுள்ள காங்., பொதுக்குழுக் கூட்டத்தில், காங்.,
பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, லோக்சபா தேர்தலுக்கான பிரசார உத்திகளை
வகுக்கவும், கட்சிப் பணிகளில் யாரை முன்னிலைப்படுத்துவது என்பது குறித்து
ஆலோசனை நடத்தவும், காங்., துணைத் தலைவர், ராகுல் தலைமையில், நேற்று, திடீர்
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்கிய முடிவு:
ராகுலின்
வீட்டில், காங்., முக்கிய தலைவர்கள் அகமது படேல், ஜனார்தன் திவேதி உட்பட
பலர் பங்கேற்ற கூட்டத்தில், பிரியங்காவும் கலந்து கொண்டார்.இந்த
கூட்டத்தில், லோக்சபா தேர்தல் பிரசார உத்திகள், பிரசாரத்தில் ஈடுபடும்
தலைவர்கள் போன்ற முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.இந்நிலையில், பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, மத்திய
அமைச்சர்கள், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்
விரைவில் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப் பணிக்கு
திரும்பி அனுப்பப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தலைவர்கள்
பங்கேற்ற இந்த கூட்டத்தில், பிரியங்கா திடீரென பங்கேற்றுள்ளது, மத்திய
அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவிகள் பலவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்
எனவும் செய்திகள் வெளியாகிஉள்ளன.
Comments