புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பேசிய, பிரதமர்,
மன்மோகன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''பிரதமரின் கருத்து,
எனக்கும் உடன்பாடு தான்; இந்தியாவிற்கு நல்ல காலம் பிறக்கத் தான் போகிறது;
நான்கு மாதம் பொறுத்திருங்கள். ஊழலுக்கான வாய்ப்புகளை, துவக்கத்திலேயே
தடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான,
நரேந்திர மோடி கூறினார்.
டில்லியில், 12வது, வெளிநாடு வாழ்
இந்தியர்கள் மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. அதில் பேசிய பிரதமர்,
மன்மோகன் சிங், 'நாட்டின் பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளதாக, பிரசாரம்
செய்யப்படுகிறது. அதை நம்ப வேண்டாம். நம் நாட்டிற்கு நல்ல எதிர்காலம்
காத்திருக்கிறது' என, தெரிவித்திருந்தார்.
டாலர்களா?
மாநாட்டில்
நேற்று பேசிய குஜராத் முதல்வர், நரேந்திர மோடி கூறியதாவது: வெளிநாடு வாழ்
இந்தியர்கள் என்ற உடனே, நமக்கு, அவர்கள், டாலர்களாகவும் பவுண்டுகளாகவும்
கொண்டு வந்து குவித்து விடுவர் என்ற நினைப்பு தான், மேலோங்கி நிற்கிறது.
நம் இந்திய சகோதர, சகோதரிகளை, டாலர்களாகவும், பவுண்டுகளாகவும் பார்க்கக்
கூடாது. அவர்களது பணிச்சூழல் வித்தியாசமானது; உலகளாவிய வாய்ப்புகளையும்,
அனுபவத்தையும், பரிச்சயத்தையும் உடையது. அவர்களது இந்த அனுப வங்கள், நம்மை,
புதிய திசையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். நான் பிரதமரின் கருத்தோடு
ஒத்துப்போகிறேன். இந்தியாவிற்கு நல்ல காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதைப் பற்றி, நான் வேறு எதுவும் சொல்லப் போவதில்லை. அந்த நல்ல
காலத்திற்காக, நாம், நான்கு அல்லது ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
எப்படியானாலும், இந்தியாவிற்கு நல்ல காலம் காத்திருக்கிறது என்பதை, நான்
உறுதியாகச் சொல்கிறேன். வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளர்கள், தற்போது,
மாநில அரசுகளோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதை விரும்புகின்றனர்.
ஊழலை ஒழிப்பது எப்படி?
'லோக் ஆயுக்தா' மற்றும், 'லோக்பால்' போன்றவை, ஊழல் நடந்த பின்
விசாரிப்பவை. ஊழலே நடக்காமல் செய்ய வேண்டும். குஜராத்தில், ஆசிரியர்
நியமனத்தில் நடக்கும் ஊழலைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தொடர்பான விண்ணப்பங்களை, இணையத்தில் தான் விண்ணப்பிக்க
முடியும். இதன் மூலம், வெளிப்படைத் தன்மை வந்துவிட்டது; விரைந்து நடவடிக்கை
எடுக்க முடிகிறது. குஜராத்தில், ஆரம்பப் பள்ளிகளும், தர அடிப்படையில்
வரிசைப்படுத்தப்படுகின்றன. இதனால் கல்வி மேம்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்
பேசினார். இந்தாண்டில் வர உள்ள பார்லி., தேர்தலுக்குப் பின், புதிய அரசு
அமைய இருப்பதை சுட்டிக் காட்டிய மோடி, தான் அமைக்க உள்ள சர்தார் படேல் சிலை
பணிக்கு, ஒத்துழைப்பு அளிக்கும்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களை கேட்டுக்
கொண்டார்.
Comments