ராஜ்யசபா தேர்தல் - அதிமுக, சிபிஎம் வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

ராஜ்யசபா தேர்தல் - அதிமுக, சிபிஎம் வேட்பாளர்கள் மனுத் தாக்கல்சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நால்வரும் இன்று மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில் திமுக தனது வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது. தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.

அதிமுக நான்கு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஒரு இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், மாநில மகளிர் அணி செயலாளர் சசிகலா புஷ்பா, நெல்லை மாநகர மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் மற்றும் அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கரான் போட்டியிடுகிறார். இவர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான ஜமாலுதீனிடம் தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு வேட்பாளர்கள் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர் டி.கே.ரங்கராஜன் மனுத் தாக்கல் இதேபோல மார்க்சிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜனும் இன்று மனுத் தாக்கல் செய்தார். அவர் மனுத் தாக்கல் செய்தபோது மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments