புதுடில்லி: ''மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை, 12 ஆக
உயர்த்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என, பெட்ரோலியத்துறை
அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.
ஒருமித்த கருத்து:
டில்லி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்த பின், மக்களை பாதித்த விஷயங்கள் என்ன என, இப்போது தான் பின்னோக்கி பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில், மிகவும் முக்கியமானதான, சமையல் காஸ் மானிய சிலிண்டர் விஷயத்தில், காங்கிரஸ் தரப்பில் ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. மானிய விலையில் வழங்கப்படும், சிலிண்டர் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களை, மானிய விலையில் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால், பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, அதற்கு வாய்ப்பே இல்லை என, உறுதிபட தெரிவித்து இருந்தார். மொய்லியின் இந்த கருத்தால், காங்கிரஸ் கட்சிக்குள், முணுமுணுப்பு கிளம்பியது. இந்நிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் வீரப்ப மொய்லி, கடந்த வாரம், சொன்னதற்கு மாறாக கருத்து தெரிவித்தார்.
ஆலோசனை:
அவர், கூறியதாவது: மானிய சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துடன் ஆலோசித்து, பொருளாதார விவகாரங்களுக்கான, கேபினட் கமிட்டியின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments