
டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில்
வந்த கும்பல்தான் நள்ளிரவு ரெய்டின்போது தங்களிடம் தவறாக நடந்ததாக
பாதிக்கப்பட்ட உகாண்டா பெண் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் கிரிக்கி பகுதியில் சோம்நாத் பார்தி தலைமையிலான ஒரு கும்பல்
நள்ளிரவில் நடத்திய ரெய்டின்போது பல உகாண்டா பெண்கள் தவறான முறையில்
கையாளப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் சோம்நாத் பார்தி மீ்து வழக்குப் பதிவு
செய்தனர்.
இதனால்தான் கெஜ்ரிவால் கொந்தளித்து டெல்லி காவல்துறை மற்றும்
உள்துறை அமைச்சருக்கு எதிராக தர்ணாப் போராட்டத்தை அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் பேசுகையில், உண்மையில் உகாண்டா
பெண்களைக் காக்கும் வகையில்தான் பார்தி செயல்பட்டார். இதை உகாண்டா தூதரகமே
பாராட்டியுள்ளது. பார்தியையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். கடிதமும்
கொடுத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பார்தி தலைமையில் வந்த கும்பலே தங்களிடம் அத்துமீறி நடந்ததாக
உகாண்டா பெண் ஒருவர் பார்தியை அடையாளம் காட்டியுள்ளார். இதனால் பார்தி
மீதான காவல்துறை நடவடிக்கை இறுக்கமாகும் என்று தெரிகிறது.
பார்தி மீது டெல்லி மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜராகி இப்பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
கிர்க்கி பகுதியில், வெளிநாட்டினர், குறிப்பாக உகாண்டா பெண்கள்
தங்கியிருந்த இடத்தில் விபச்சாரம் நடப்பதாக அப்பகுதியினரிடமிருந்து வந்த
புகாரைத் தொடர்ந்து சோம்நாத் பார்தி தலைமையில் பலர் அங்கு நள்ளிரவில்
திரண்டு சென்று அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதையடுத்து போலீஸாரும் அங்கு
விரைந்தனர்.
அந்த இடத்தில் போலீஸாருக்கும், பார்தி தலைமையிலான கும்பலுக்கும் இடையே
மோதல் வெடித்தது. இந்த ரெய்டின்போது பார்தியுடன் வந்தவர்கள் , உகாண்டா
பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பார்தி மீது
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தற்போது
மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் பார்தியை
அடையாளம் காட்டியுள்ளாராம். அந்த வாக்குமூலத்தை தற்போது போலீஸார்
பெற்றுள்ளனர்.
இந்தப் பெண்ணை தற்போது இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக போலீஸார்
சேர்த்துள்ளனர்.
Comments