டில்லி போலீசாரை எதிர்த்து முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம்

புதுடில்லி : டில்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.



தர்ணா போராட்டம் :
டில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியின் உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பணிமாற்றமாவது செய்ய வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் மனு அளித்தார். இந்த புகார் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், இன்று தர்ணா போராட்டத்தை துவங்க உள்ளனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க இன்று காலை 10 மணி வரை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கெஜ்ரிவால் கெடு விதித்துள்ளார்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளதாலும், குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும் போராட்டத்தில் கட்சியினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளார். முதல்வர், அமைச்சர்களுடன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதால் உள்துறை அமைச்சர் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆதரவு தேவையற்றது :

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர எடுத்துள்ள முடிவு தேவையற்றது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த சிதம்பரம் கூறுகையில், என்னை பொறுத்த வரை ஆம் ஆத்மி கட்சிக்கு தரும் ஆதரவு தேவையற்றது; டில்லி தேர்தலில் 8 இடங்களைக் கைப்பற்றி நாங்கள் 3வது இடத்தில் உள்ளோம்; நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஒன்று ஆட்சி அமைப்பதற்கு ஓட்டளித்திருக்க வேண்டும்; அல்லது முக்கிய எதிர்கட்சிக்கு ஓட்டளித்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைதியாக இருந்திருக்க வேண்டும்; கட்சி தலைமையின் இந்த முடிவு சரியானதா இல்லையா என்பற்கு காலம் பதில் சொல்லும்; ஆம் ஆத்மிக்கு அளித்துள்ள ஆதரவால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது; கெஜ்ரிவால் நூற்றுக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான முறைகேடு புகார்களை கூறி வருகிறார்; டில்லி அரசால் முடிந்தால் முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல்வாதி மீதோ அதிகாரி மீதோ நடவடிக்கை எடுக்கட்டும்; அது இல்லாமல் ஏன் முறைகடு பற்றியே பேசி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் குற்றச்சாட்டு :

கெஜ்ரிவாலை கடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்த சிறிது நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்தார். மேலும் இது மத்திய அரசின் அரசியல் விளையாட்டு என குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து டுவிட்டர் பகுதியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகள் மிரட்டல் குறித்து போலீசார் என்னிடம் தெரிவித்தனர்; இதனை மீடியாவிற்கு வெளியிட வேண்டாம் என என்னிடம் கேட்டுக் கொண்டனர்; ஆனால் சிறிது நேரத்தில் மீடியாவை அழைத்து அவர்களே விபரத்தை கூறி உள்ளனர்; நான் பாதிக்கப்பட கூட என போலீசார் இதனை வெளியிடவில்லை; தற்போது யார் என்னை தாக்கினாலும், பக்தலின் ஆட்கள் தான் என்னை தாக்கினார்கள் என நான் நம்ப வேண்டும் என்பதாக தான் இந்த ஏற்பாடுகள்; டில்லி போலீஸ் முட்டாள்களா அல்லது அவர்களும் மத்திய அரசுடன் சேர்ந்து அரசியல் நாடகம் ஆடுகிறார்களா என தெரியவில்லை; உயிர் பயம் எனக்கு கிடையாது; ஏற்கனவே நான் கூறியது போல் எனக்கு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது; அதனால் எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Comments