கோவை மாவட்டத்தில் “மிஸ்டு கால்“ விவகாரத்தால் இளம்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மஞ்சூரை சேர்ந்த
செல்வதுரையின் மகன் சதீஸ் (28). இவரும் ஆலாந்துறை செம்மேடு காந்தி காலனியை
சேர்ந்த அப்புச்சி சின்னானின் மகள் பட்டத்தரசி (23) என்பவரும் பூண்டி
வெள்ளிங்கிரியில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சதீஸ் குடும்பத்துடன்
ஆலாந்துறையில் உள்ள காந்திநகரில் வசித்து வந்தார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு
கைக்குழந்தையும் உள்ளனர். குடும்பத்துடன் மாமனார் ஊரிலேயே சதீஸ் தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சதீசின் கைபேசிக்கு மிஸ்டு
கால் வந்தது. அதனை தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் ஒரு பெண் குரல்
கேட்டது. நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்று சதீஸ் கேட்டார்.
அதற்கு அந்த பெண் நான் கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த சிவசங்கரி (24)
என்றும், தவறுதலாக உங்கள் கைப்பேசிக்கு அழைப்பு வந்து விட்டதாகவும்
தெரிவித்துள்ளார்.
அவரது குரலில் மயங்கிய சதீஸ் மீண்டும் மீண்டும் சிவசங்கரியை தொடர்பு
கொண்டு பேசினார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. மனைவி
மற்றும் குழந்தைகள் இருப்பதை அறவே மறந்து நட்பு காதலாக மாறும் வரை
கண்மூடித்தனமாக பேசி மகிழ்ந்தார்.
ஒருமுறை நாள் மற்றும் இடம் தெரிவு செய்யப்பட்டு இருவரும் சந்தித்தனர்.
இருவருக்கும் பிடித்து விட்டது. ஒருவர் அழகை ஒருவர் புகழ்ந்து தள்ளினர்.
சிவசங்கரியிடம் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதை சதீஸ் அடியோடு
மறைத்துள்ளார்.
இருவரும் பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த யூன் மாதம் முறைப்படி பெண் கேட்டு சிவசங்கரியை சதீஸ்
திருமணம் செய்து கொண்டார். அங்கும் மாமனார் வீட்டிலேயே தங்கி பெயிண்டர்
வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் முதல் மனைவி பட்டத்தரசி கணவர் சதீஸ் காணாமல்போனது குறித்து
அதிர்ச்சியடைந்தார். பொங்கலுக்கு முன் மஞ்சூரில் உள்ள தனது மாமனார்
வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றார். அங்கு கணவர் இல்லாததால்
பெண் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு வந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சதீஸ் மஞ்சூருக்கு சென்றார். அங்குள்ள தனது
மகளை அழைத்துக்கொண்டு முதல் மனைவியிடம் கொண்டு வந்து விட காந்தி காலனிக்கு
வந்தார். அங்கு வந்த சதீசிடம் மாமனார் அப்புச்சி சின்னான் மற்றும்
உறவினர்கள் இத்தனை நாள் எங்கே போனீர்கள்? என்று விசாரித்துள்ளனர்.
அப்போது சதீஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். பின்னர்
வேறு வழியின்றி நடந்தவற்றை கூறி தான் சிவசங்கரி என்ற பெண்ணை 2வது திருமணம்
செய்து கொண்டதாக தெரிவித்தார். அதிர்ச்சிடைந்த பட்டத்தரசி மற்றும்
உறவினர்கள் இது குறித்து ஆலாந்துறை பொலிசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர்
வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Comments