கருணாநிதி
தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், மதுரையில், அழகிரி அளித்த
பேட்டி:
கருணாநிதியின் பேட்டியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். என்
மீது இப்படிப்பட்ட அபாண்டத்தை சுமத்துவார் என, கனவிலும் நினைத்துப்
பார்க்கவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டை, என் பிறந்த நாள் வாழ்த்தாக
ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 24ம் தேதி, கருணாநிதியை சந்தித்து, சில
நியாயங்களை எடுத்துக் கூறினேன். நீக்கப்பட்ட தொண்டர்கள், ஒன்றிய செயலர்கள்
தெரிவித்த குற்றச்சாட்டுக்களை காண்பித்தேன். அதற்கு, கட்சி எனக்கு கொடுத்த
பரிசு: 'சஸ்பெண்ட்!' நியாயத்திற்காக நான் போராடியதற்கு, இப்படிப்பட்ட
பரிசா? என்னை நீக்கிய பின், பொதுச் செயலர் அன்பழகன், அதற்கான காரணங்களை
கூறினார். அன்று அவர் சொன்ன காரணங்கள், இன்று கருணாநிதி கூறியதில் இல்லையே.
சந்தேகம் இருந்தால், அன்று கூறிய காரணங்கள், 'முரசொலி'யில் வந்துள்ளது.
'நான்
ஏன் குறைகளை நேரில் சொன்னேன்; அமைப்புகள் இல்லையா, அறிவாலயம், பொதுக்குழு
இல்லையா?' என சிலர் கேட்டனர். ஏன் மாவட்ட செயலர்களை, சி.ஐ.டி., காலனிக்கு
அழைத்து, கருணாநிதி பேசவில்லையா? தொண்டர்கள், ஒன்றிய செயலர்களின்
குற்றச்சாட்டுக்கள், தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச் செயலர் அன்பழகனிடம்
போய்ச் சேருவதில்லை. புகார், 'பேக்ஸ்'களை சிலர், மறைத்து விடுகின்றனர்.
அதனால் தான், அன்று நேரடியாக கருணாநிதியை சந்தித்து சொன்னேன்; இதுதான்
உண்மை. மதுரையில் மட்டுமல்ல... தமிழகம் முழுவதும், உட்கட்சித் தேர்தலில்
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
'பத்திரிகைகளில் ஏன் பேட்டி கொடுக்கிறாய்' என்கின்றனர். நீக்கப்பட்ட பின்
தான், இந்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினேன். எத்தனை குற்றச்சாட்டுக்கள்
கூறினாலும், என்றும் உடன் இருப்பேன்; தொண்டர்களும் என்னுடன் இருப்பர். நான்
ஏற்கனவே கூறியதுபோல், கருணாநிதி நன்றாக இருக்க வேண்டும். அவர் இன்னும்
பலஆண்டுகள் வாழ வேண்டும். அவருக்கு முன் நாங்கள் இறந்து, அவரது கண்ணீர்
எங்கள் உடல் மீது விழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்; அப்போது அவரது
கண்களில் கண்ணீர் தளும்பியது. இதன் பின், நிருபர்களின் கேள்விகளை
தவிர்த்து, வீட்டிற்குள் சென்று விட்டார் அழகிரி.
வீட்டிற்குள் கதறி அழுத அழகிரி:
விருதுநகர்
மாவட்டத்தில் ஆதரவாளர்களை சந்தித்து விட்டு மதுரை திரும்பினார் அழகிரி.
அப்போது, சென்னையில் கருணாநிதி அளித்த பேட்டி விவரம் அவருக்கு
தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் கருத்துக்கு பதில் கேட்க நிருபர்கள்
கூடியிருந்தனர். ஆனால், "யாரையும் சந்திக்கவில்லை," எனக் கூறி, பகல் 2.15
மணிக்கு வீட்டிற்குள் சென்று விட்டார். பின் மாலை 5.30 மணிக்கு நிருபர்களை
சந்தித்து விளக்கினார். முதலில் விளக்கம் கூறுவதை தவிர்த்த அவர், மாலையில்
எதற்காக நிருபர்களை அழைத்து விளக்க வேண்டும். அவருக்கு 'மனமாற்றம்' ஏற்பட
காரணம் என்ன? என்பது குறித்து அவரது
ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
வீட்டிற்குள் சென்ற அழகிரியுடன், அவரது மகன் தயாநிதி உட்பட சிலர் "உங்கள் மீது சுமத்தப்பட்டது வீண் பழி. சிலர் தூண்டுதலின் பேரில் தான் இப்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் விளக்கம் கூறவில்லை என்றால் அது உண்மையாகி விடும்," எனக் கூறியுள்ளனர். இதன் பின் தான் விளக்கம் கூற அவர் முடிவு செய்தார். பேட்டி முடிந்தவுடன் சட்டென வீட்டிற்குள் சென்ற அழகிரி, சத்தமாக அழுதுவிட்டார். "பிறந்த நாள் விழா வரும் நிலையில் அழ வேண்டாம்," என்று, நாங்கள் ஆறுதல் கூறினோம். மதுரையில் அவரது உருவ பொம்மை எரித்ததைக் கூட அவருக்கு தெரியக் கூடாது என, 'டிவி'யை ஆப் செய்தோம், என்றார்.
Comments