தமிழகம் முழுவதும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை:தமிழகம் முழுவதும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் பட்டியலில், 5.37 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட, கூடுதலாக, 23.49 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


இம்மாதம் முதல் தேதியை, தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்தப் பணி, கடந்த அக்டோபரில் நடந்தது. அக்டோபர், முதல் தேதி வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில், 2.58 கோடி ஆண்கள்; 2.56 கோடி பெண்கள்; இதர பிரிவினர், 2,421 என, மொத்தம் 5.14 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.வாக்காளர் பட்டியல், திருத்த காலத்தின்போது, பெயர் சேர்க்க, 29.38 லட்சம், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், 27.53 லட்சம் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப் பதிவு காரணமாக, 4.03 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

புதிய பட்டியல்:நேற்று, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 2.69 கோடி ஆண்கள்; 2.68 கோடி பெண்கள்; இதர பிரிவினர், 2,996 பேர் என, மொத்தம், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர். இறுதி வாக்காளர் பட்டியலில், புதிதாக 23.49 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் உள்ள, மொத்த மக்கள் தொகையில், வாக்காளர் எண்ணிக்கை, 71.24 சதவீதம். இது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கணக்கிடப்பட்ட, மொத்த மக்கள் தொகைக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட, மக்களின் தொகைக்கும் உள்ள விகிதத்தை (71.16 சதவீதம்) ஒத்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள், வாக்காளர் பட்டியலில், 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் உள்ளனர்.

அடையாள அட்டை:வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு,தேசிய வாக்காளர் தினமான, ஜனவரி 25ம் தேதி, ஓட்டுச்சாவடிகளில், புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். பொதுமக்கள், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை, மாநகராட்சிப் பகுதியில் உள்ள, மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில், தாலுகா அலுவலகங்களில், தெரிந்து கொள்ளலாம். மேலும், http:/elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.லோக்சபா தேர்தலுக்கு, இறுதி வாக்காளர் பட்டியல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனினும், வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாதோர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகம் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது இணைய தளம் மூலமாக, வேட்பு மனுவிற்கு, முந்தைய நாள் வரை விண்ணப்பிக்கலாம். இதில், தகுதியுள்ளவர்கள் பெயர், துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். இத்தகவலை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று தெரிவித்தார். இணை தேர்தல் அதிகாரி சிவஞானம், துணை தேர்தல் அதிகாரி சசிகுமார், ஆகியோர் உடனிருந்தனர். சென்னையில் வாக்காளர் அதிகம் : தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 36.36 லட்சம்வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 31.46 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மிகவும் குறைவாக, அரியலூர் மாவட்டத்தில், 4.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிக வாக்காளர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு, 7.41 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வயது வாரியாக வாக்காளர் விவரம்:தமிழக வாக்காளர்களில், 30 வயதில் இருந்து 39 வயதிற்குட்பட்டோர், அதிக அளவில் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில், இவர்களின் பங்களிப்பு, 21.71 சதவீதம். இதற்கு அடுத்தபடியாக, 40 வயதில் இருந்து, 49 வயதிற்குட்பட்ட, வாக்காளர் அதிகம் உள்ளனர். 18 வயதில் இருந்து, 19 வயதிற்குட்பட்டோர், 11.99 லட்சம் பேர். பட்டியலில் இவர்களின் பங்களிப்பு, 2.3 சதவீதம்.

Comments