'சிறையில் சித்ரவதை அனுபவித்தோம்': தாயகம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட, மண்டபம் மீனவர்கள், நேற்று தமிழகம் திரும்பினர். நாடு திரும்பிய மீனவர்கள், 'இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்தோம்; எங்களை மீட்ட, தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்' என, கூறினர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, புதுக்கோட்டை மீனவர்கள்,
51 பேர், ராமநாதபுரம் மீனவர்கள், 19 பேர், காரைக்கால் மீனவர் ஒருவர் மற்றும் அவர்களின், 15 விசைப்படகுகளை, 17ம் தேதி, இலங்கை, மல்லாகம் கோர்ட் விடுவித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், சர்வதேச கடல் பகுதியில், 71 மீனவர்களையும், 15 படகுகளையும், இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். நல்ல நிலையில் இருந்த, ஐந்து படகுகளில் புறப்பட்ட, 15 மீனவர்கள், நேற்று காலை, காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்தனர். மீனவர்கள் கூறுகையில், 'இலங்கை சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும், சித்ரவதையை அனுபவித்தோம். அரைவயிற்றுக்கு தான், சாப்பாடு கிடைத்தது. நாங்கள் அனுபவித்த சித்ரவதையை, வார்த்தைகளால் சொல்ல முடியாது. 45 நாட்கள் சிறையில் இருந்த நாங்கள், மீண்டும் குடும்பத்தினரை பார்ப்போம் என, நினைக்கவில்லை. எங்களை மீட்ட தமிழக அரசுக்கு, நன்றிக்கடன் பட்டுள்ளோம்' என்றனர். மற்ற மீனவர்கள், 56 பேரும், இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த, 'சமுத்ரா-பரேதர்' என்ற கப்பலில், நேற்று மாலை, காரைக்கால் துறைமுகம் வந்தனர். பழுதான, 10 படகுகள், கயிறு கட்டி இழுத்து வரப்பட்டன. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட, மண்டபம் மீனவர்கள், மேலும் 15 பேர், நேற்று விடுதலை செய்யப்பட்டனர். 'இரண்டு நாளில் விசைப்படகுகளும் விடுவிக்கப்பட்டு, மீனவர்களும் மண்டபம் வந்து சேர்வர்' என, 'கியூ' பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Comments