சட்ட அமைச்சர் பார்தியை காப்பாற்றும் கெஜ்ரிவால்

புதுடில்லி: "ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த, டில்லி சட்ட அமைச்சர், சோம்நாத் பார்தி, சில நாட்களுக்கு முன், உகாண்டா நாட்டு பெண்ணை, வலுக்கட்டாயமாக தன் காரில் ஏற்றிச் சென்று, போதை மருந்து சோதனை செய்ய முயன்றார்.

இதையறிந்த, பெண்கள் அமைப்புகள், அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
"அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, மாநில கவர்னர் நஜீப் ஜங்கை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், நேற்று நேரில் சென்று வலியுறுத்தினர். இந்நிலையில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலும், நேற்று, கவர்னரை சந்தித்தார். அப்போது அவர், சட்ட அமைச்சர், பார்தியை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்வார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவ்வாறு இல்லாமல், மரியாதை நிமித்தமாக, கவர்னரை சந்தித்ததாக, முதல்வர் அலுவலகங்கள் தெரிவித்தன. அமைச்சரை காப்பாற்ற முயலும், கெஜ்ரிவாலுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதற்கிடையே, அமைச்சர் பார்தி மீது கூறப்படும் புகார்கள் குறித்து, அறிக்கை அளிக்குமாறு, டில்லி போலீசாருக்கு, டில்லி, நகர நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Comments