மோடி மிகச் சிறந்த மனிதர் : சல்மான் கான் புகழாரம்

ஆமதாபாத் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மிகச் சிறந்த மனிதர் எனவும், அவர் சிறந்த பிரதமராக விளங்குவார் எனவும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் புகழாரம் சூட்டி உள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று சந்தித்து பேசினார். சிறிது நேர சந்திப்பிற்கு பின் இருவரும், உத்தராயன உற்சவத்தை முன்னிட்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் கான் கூறியதாவது : நரேந்திர மோடி மிகச் சிறந்த மனிதர்; எனது தந்தை சலீம், அடிக்கடி மோடியை பாராட்டி பேசுவார்; நரேந்திரமோடி நாட்டின் மிகச் சிறந்த பிரதமராக விளங்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை; அந்த நல்ல மனிதருக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்; நாட்டின் சிறந்த மனிதர் யார் என்பதை கடவுள் தீர்மானிப்பார்; அத்தகைய சிறந்த மனிதர் நிச்சயம் வெற்றி பெறுவார்; மோடி, அவர் மீதான எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார்; இவரை போன்று வளர்ச்சியை ஏற்படுத்திய ஒருவரை நான் கண்டதில்லை. இவ்வாறு சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஜனவரி 24ம் தேதி வெளியாக உள்ள புதிய பட விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த சல்மான் கான் பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மோடியையும் சந்தித்துள்ளார். சல்மான் கானை சந்தித்ததும் அவருடன் உணவு சாப்பிட்டவும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மோடிக்கு ஆதரவாக சல்மான் கான் கூறிய கருத்துக்களுக்கு இஸ்லாமிய இயக்கத் தலைவர் பிராங்கி மகாலி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி பற்றிய பற்றிய சல்மானின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments