நடிகர் சிவாஜி சிலை அகற்றப்படுமா அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, நடிகர் சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள, காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் காந்தி சிலை எதிரில், 2006 ஜூலையில், நடிகர் சிவாஜி சிலை, நிறுவப்பட்டது. கடந்த, தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த கருணாநிதி, சிலையை திறந்து வைத்தார்.


அப்போதே, சிவாஜி சிலையை, அங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தியாகி சீனிவாசன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், காந்தி சிலையை மறைக்கும் விதத்தில், சிவாஜி சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பொது சாலையில், சிலைகள் அல்லது கட்டுமானம் இருக்காது என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு அளித்த உத்தரவாதம் மீறப்படுகிறது. எனவே, காமராஜர் சாலையில், சிவாஜி சிலை அமைக்கக் கூடாது என, கூறப்பட்டது.

இம்மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றம், அப்போது தடை ஏதும் விதிக்காததால், சிலை திறக்கப்பட்டது.இதையடுத்து, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என, மனுவில், திருத்தம் கொண்டு வரப்பட்டது. மனு தாக்கல் செய்த, தியாகி சீனிவாசன், மரணமடைந்து விட்டதால், அவருக்குப் பதில், நாகராஜன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.கலை உலகில் சாதனை படைத்த, நடிகர் சிவாஜியை கவுரவிக்க, சிலை அமைக்கப்பட்டது; அதை, அகற்றக் கூடாது என, சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர், சந்திரசேகரன், தமிழ் சங்கப் பலகையின் நிறுவனர், தமிழ் பித்தன் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை, நீதிபதிகள் அக்னி ஹோத்ரி, சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஆர்.காந்தி, அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, அரசு பிளீடர் மூர்த்தி, சிவாஜி சமூக நல பேரவை சார்பில், வழக்கறிஞர்கள், எஸ்.பிரபாகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், 'காமராஜர் சாலையில் இருந்து, வலது புறமாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு, மோட்டார் வாகனங்களில் செல்பவர்களுக்கு, சிலையால், பார்வை மறைக்கிறது. எனவே, போக்குவரத்து சுமுகமாக இருக்க, இந்த இடத்தில் இருந்து, சிலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.
மனுக்களை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

பாதசாரிகளுக்கும், மோட்டார் வாகனங்களில் செல்பவர்களுக்கும் தான், சாலைகளும், தெருக்களும் உள்ளன; சிலைகள் அமைக்க, தெருக்களும், சாலைகளும் இடம் அல்ல.

தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை, உரிய முறையில் மதிக்க வேண்டும் என்பதில், எந்த கருத்து மாறுபாடும் இல்லை. சாலையின் நடுவில், தலைவர்களின் சிலைகளை நிறுவி, பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதன் மூலம், அந்த தலைவர்களை அவமரியாதை செய்கின்றனர்.

நினைவகங்களை, ஆட்சேபனை இல்லாத பகுதிகளில், குறிப்பாக, சாலைகளின் நடுவில் அல்லாமல், அமைக்க வேண்டும். பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் விருப்பத்துக்கு மாறாக, சாலையின் நடுவில் சிலையை அமைத்து, சிவாஜி போன்ற சிறந்த கலைஞர்களின் பெயர்களை, வழக்குக்குள் இழுக்கக் கூடாது.

கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது, சுமுகமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது. போக்குவரத்து போலீஸ், ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளது.

இந்த விஷயத்தில், அரசு தான் முடிவெடுக்க வேண்டும். எனவே, நாங்கள் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், சிவாஜி சிலை அகற்றம் குறித்து, அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர், சந்திரசேகரன் கூறியதாவது: சென்னை, காமராஜர் சாலையில், சிவாஜி சிலையை அகற்றுவது குறித்த, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சிலையை அகற்றும் முடிவு, தமிழக அரசின் கையில் உள்ளது. சிலையை அகற்றாமல், சாலையை அகலப்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments