ஊழல் நிறுவனத்திடம் ஆயுதம் வாங்க முடிவு: மத்திய அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் சிக்கிய, இத்தாலி நிறுவனத்தின் சகோதர நிறுவனத்திடம், 1,800 கோடி ரூபாய்க்கு, நீர் மூழ்கி குண்டுகள் வாங்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்':

வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த, 'பின்மெக்கானிக்கா' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இதையடுத்து இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு, புதிதாக நீர்மூழ்கி குண்டுகள் வாங்க,ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 1,800 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்த நீர்மூழ்கி குண்டுகளை, 'பின்மெக்கானிகா' நிறுவனத்தின் சகோதர நிறுவனமான 'ஒயிட்ஹெட் அலெனியா சிஸ்டெமி'யிடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கவுன்சில் அனுமதி:

ராணுவத்தின் கொள்முதல் கவுன்சில், இதற்கான அனுமதியை அளித்துள்ளது. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேட்கர் கூறுகையில், " எந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதோ, அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம், புதிதாக ஆயுதம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்,” என்றார்.

Comments