உகாண்டா பெண்களிடம் டில்லி அமைச்சர் சோம்நாத் பார்தி தரக்குறைவாக நடந்ததாக புகார்

புதுடில்லி : உகாண்டாவைச் சேர்ந்த பெண்களிடம், தரக் குறைவாக நடந்து கொண்டதாக, டில்லி மாநில சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான, சோம்நாத் பார்தி மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்ட அமைச்சர்:
டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது.
டில்லி மாநில அரசில், சட்ட அமைச்சராக இருப்பவர், சோம்நாத் பார்தி. இவர், டில்லியில், தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில், போதை மருந்து கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்கப் போவதாக கூறி, தன் சகாக்களுடன், நள்ளிரவில், சமீபத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டார்.அப்ேபாது, போதை மருந்து கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகித்து, கிழக்கு ஆப்பிரிக்க நாடான, உகாண்டாவைச் சேர்ந்த நான்கு பெண்களை, தரக் குறைவாக அவர் நடத்தியதாக, அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், வட மாநில, 'டிவி' சேனலுக்கு அளித்துள்ள பேட்டி: சம்பவத்தன்று இரவில், ஒரு விருந்துக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, அமைச்சர் சோம்நாத் பார்தியும், அவருடன் வந்த சிலரும், எங்களை வழி மறித்தனர்.நாங்கள் போதை மருந்து சாப்பிட்டதாக சந்தேகித்த அவர்கள், எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதிக்க முடிவு செய்தனர். எங்கள் இருவரை மட்டும், காரில், வலுக்கட்டாயமாக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


பொது இடத் தில்:

சோதனையில், நாங்கள் போதை மருந்து சாப்பிடவில்லை என, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எங்களை விடுவித்தனர். இடைப்பட்ட நேரத்தில், சிறுநீர் கழிப்பற்கு கூட, எங்களை அனுமதிக்கவில்லை. பொது இடத்தில், சாலையில் சிறுநீர் கழிக்க வைத்தனர்.இவ்வாறு, அந்த பெண் கூறினார்.

இந்த விவகாரம், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், டில்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து டில்லியில் வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என, வெளியுறவு அமைச்சகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Comments