பிரதமர் தேர்வில் மோடிக்கு முதலிடம் : கருத்து கணிப்பில் தகவல்

புதுடில்லி : பிரதமர் தேர்வில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதால் வரும் லோக்சபா தேர்தலில் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் 6 இடங்களை அக்கட்சி கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.



கருத்துகணிப்பு தகவல் :

ஏபிபி நியூஸ் நிறுவனத்திற்காக ஏசி நெல்சன், லோக்சபா தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் ஆம் ஆத்மி கட்சி மீதான மக்களின் ஈர்ப்பு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஓட்டுக்களை சின்னாபின்னமாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநில தலைநகரத்தில் உள்ள 21 தொகுதிகளில் 3 இடங்களை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடியும் என தெரிய வந்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் 17 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ., 10 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. டில்லியைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் மும்பை, நெய்டா-காசிதாபாத் பகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும். அதே சமயம் தலைநகரங்களின் அதிநவீன வளர்ச்சி பெற்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற முடியாது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
பிரதமர் தேர்வு :

முக்கிய நகரங்களான டில்லி மற்றும் மும்பையில் பிரதமர் தேர்வு குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அதிகமானவர்களின் தேர்வு மோடி ஆக உள்ளது. 45 சதவீதம் பேர் மோடி பிரதமராக வர வேண்டும் எனவும், 42 சதவீதம் பேர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மும்பையின் தானே பகுதியில் 51 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவும், 18 சதவீதம் பேர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், 22 சதவீதம் பேர் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் டில்லியில் 16 சதவீதம் பேர் மட்டுமே கெஜ்ரிவால் பிரதமராக வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி டில்லியில் 57 சதவீதம் ஓட்டுக்களுடன் வெற்றி பெற்று 6 இடங்களையும், நொய்டாவில் 33 சதவீதம் ஓட்டுக்களுடன் ஒரு தொகுதியையும், மும்பையின் தானே பகுதியில் 17 சதவீதம் ஓட்டுக்களுடன் ஒரு இடத்திலும், குர்கானில் 21ஓட்டுக்களுடன் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. காங்கிரசிற்கு போதிய அளவு ஓட்டுக் கிடைக்கா விட்டாலும் ஓட்டை பிரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
மோடி தாக்கு :

சமீப காலமாக, பெயர் எதையும் குறிப்பிடாமல் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தம்மீது குற்றம் சாட்டுபவர்களை தாக்கி பேசி வருகிறார். மோடி கூறியதாவது : பா.ஜ.,வை கேள்வி கட்கும் புதிய கட்சிகளுக்கு போதிய அனுபவமும் இல்லை, நாட்டை எவ்வாறு வழி நடத்துவது என்ற தொலை நோக்கு பார்வையும் இல்லை; மீடியாக்களின் அவர்களின் செயல்பாடுகளை மிகைப்படுத்தி காட்டுவதால் தலைநகரைத் தவிர மற்ற பகுதிகளை அவர் பார்ப்பதில்லை; காங்கிரசின் பாதுகாவலர்களாக செயல்படும் அவர்கள் பா.ஜ.,வை கேள்வி கேட்கின்றனர்; பா.ஜ.,வின் முதல் பிரதமரான வாஜ்பாய்க்கு மிக நீண்ட அரசியல் வாழ்க்கையில் அவருக்கு சொந்தமாக வீடு கிடையாது; அனைத்து பா.ஜ., தொண்டர்களும் நாட்டு மக்களுக்காக நேர்மையாக பணியாற்றி வருகிறார்கள்; நாட்டிலேயே நேர்மையும், எளிமையும், சிறந்த கல்வி அறிவும் பெற்ற முதல்வர் ஒருவர் இருக்கிறார்; அவர் மனோகர் பரிர்கர்; ஆனால் துரதிஷ்டவசமாக அவர் டில்லியில் இல்லாமல் கோவாவில் இருக்கிறார்; டிவி.,யில் பார்ப்பது தான் நல்லது என நாடு முடிவு செய்து விட்டது; நான் டிவியையும் செய்திதாள்களையும் பார்ப்பதில்லை; அதே சமயம் மக்களின் மனங்களை பார்க்க தவறியதில்லை. இவ்வாறு மோடி கூறி உள்ளார்.

Comments