சிதம்பரம், வாசன் திடீர் ராஜினாமா மிரட்டல்

மத்திய அமைச்சர்கள் சிதம்பரமும், வாசனும் விடுத்த திடீர் ராஜினாமா மிரட்டல், காங்கிரஸ் தலைமை வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது மிரட்டலை சமாளிக்க, தங்கபாலு கோஷ்டியினர் மீது கை வைத்துள்ளது. தங்கபாலு ஆட்கள் நீக்கப்பட்டு, நான்கு மாவட்டங்களில், சிதம்பரம் ஆதரவாளர்கள், தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோஷ்டி விகிதாச்சாரம்: 
 
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, 12 ஆண்டுகளுக்கு பின், புதிய நிர்வாகிகள், கடந்த மாதம், 17ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதில், 'கோஷ்டிகளின் விகிதாச்சாரப்படி, நியமனம் செய்யப்படவில்லை; வாசன் தரப்புக்கு, 50 சதவீத இடங்கள் தரப்பட்டுள்ளன. இது, கட்சி விரோதம்' என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆதரவு அணியினர், எதிர்ப்புக் கொடி பிடித்தனர். அதிலும், சிதம்பரம் மகன் கார்த்திக்கு, மாநில துணை தலைவர் பதவி தரப்படாத விவகாரம், அந்த அணியினர் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு, 'மத்திய அமைச்சர் வாசனும், அவரது ஆதரவு, மாநில தலைவரான ஞானதேசிகனுமே காரணம்' என, அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மேலிடத்திற்கு, சிதம்பரம் திடீர் மிரட்டல் விடுத்த தகவல், இப்போது வெளியாகி உள்ளது.

மரியாதை கிடையாதா? 

இதுகுறித்து, அந்த அணியினர் கூறியதாவது: கட்சி பதவிகளில், வாசன் அணிக்கே, அதிக பங்கு கிடைத்துள்ளது. எனவே, அவர்களிடம் இருந்து எடுத்து, சிதம்பரத்துக்கு கொடுத்திருந்தால், அது நியாயம். சிதம்பரம், வாசனை மட்டுமே நம்பி, காங்கிரஸ் இல்லை; அதை, மேலிடம் உணர வேண்டும். காங்கிரசுக்கு சோதனை வந்தபோது, கூடவே இருந்தவர், தங்கபாலு. சிதம்பரமும், வாசனும் விலகிச் சென்றவர்கள்; அவர்களுக்கு, மேலிடம் துணை போவது சரியல்ல. இவ்வாறு, தங்கபாலு கோஷ்டியினர் கூறினர்.

இதுகுறித்து, சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர், அகமது படேலை, சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது, 'என் ஆதரவாளர்களை புறக்கணித்து, எனக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டனர். என் ஆதரவாளர்கள், ஐந்து பேருக்கு உடனடியாக, மாவட்ட தலைவர் பதவி தர வேண்டும்; மாநில நிர்வாகிகள் பதவியிலும், என் ஆதரவு காங்கிரசார், ஐந்து பேரை நியமிக்க வேண்டும். இல்லையேல், நான் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை' என, மிரட்டல் விடுத்தார். இதனால், காங்கிரஸ் மேலிடம் ஆடிப் போய் விட்டது. இவ்வாறு, சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சிதம்பரம் மிரட்டலை சமாளிக்க, காங்கிரஸ் மேலிடத் தலைவர், அகமது படேல், வாசனிடம் பேசியுள்ளார். அப்போது, சிதம்பரம் அணிக்கு, சில பதவிகளை விட்டுத் தரும்படி, வாசனிடம் கேட்டுள்ளார். ஆனால், அதை ஏற்க வாசன் திட்டவட்டமாக மறுத்து விட்டதோடு, 'என் ஆதரவாளர்கள் மீது கை வைத்தால், நானும் பதவி விலகி விடுவேன்' என, பதில் மிரட்டல் விடுத்துள்ளார்.

போட்டி போட்டு மிரட்டல்:

இருவரும் போட்டி போட்டு, மிரட்டுவதால், அதிர்ந்து போன காங்கிரஸ் மேலிடம், தங்கபாலு அணி மீது கை வைத்துள்ளது. தங்கபாலு ஆதரவு மாவட்ட தலைவர்களிடம் இருந்து பதவியை பறித்து, சிதம்பரம் அணிக்கு கொடுத்துளளது. இதனால், தற்போது, கொந்தளித்துள்ள தங்கபாலு கோஷ்டியினர், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.

Comments