தேவயானி விவகாரத்தால் உறவு பாதிக்காது: அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர், தேவயானி கைது விவகாரத்தால், இந்தியாவுடனான உறவில், எந்த பாதிப்பும் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை' என, அந்நாடு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான, இந்திய துணைத் தூதராக பணியாற்றியவர், தேவயானி கோப்ராகேட், 39. 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாக, அமெரிக்க போலீசார் தேவயானியை கைது செய்தனர்.
பின், ஜாமினில் வெளிவந்தார். அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேவயானி மீதான புகார்களை திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது. எனினும், இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. தேவயானிக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தால், இந்தியாவுடனான நீண்டகால உறவு பாதிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உயர் அதிகாரி, மேரி ஹார்ப் கூறியதாவது: விசா பெறுவதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்ட படி, தேவயானி தன் பணியாளருக்கு ஊதியம் வழங்கவில்லை. அதற்காக தேவயானி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் தவறுதலான புரிதலே, தேவயானியின் கைது நடவடிக்கைக்கு காரணம் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இதில், அமெரிக்க அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை. தேவயானிக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. தேவயானிக்கு எதிரான நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எக்காரணம் கொண்டும், வாபஸ் பெற முடியாது.

Comments