
மதுரை: செல்போன் மூலம் ஏற்பட்ட காதலால், தனது காதலனைக் காண்பதற்காக
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திலிருந்து மதுரைக்கு வந்த 25 வயது
நர்சிங் மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த செயல்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ராணி, அங்கு நர்சிங் படித்து வந்தார். அப்போது
செல்போன் மூலம் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இது பின்னர் காதலாக மாறி விட்டது.
தினசரி நேரம் காலம் பார்க்காமல்
இருவரும் பேசியுள்ளனர்.
எத்தனை நாள்தான் போனிலேயே பேசுவது, நேரில் பார்க்க வேண்டும் என்று பிரகாஷ்
கேட்கவே, சரி என்று சம்மதித்த ராணி, மதுரைக்கு வந்துள்ளார். ரயில் நிலையம்
வந்து ராணியை கூட்டிக் கொண்டு அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனிப்
பகுதிக்கு அழைத்துச் சென்றார் பிரகாஷ். அங்கு ஒரு வயல் பகுதியில் அமர்ந்து
பேசியுள்ளனர்.
அப்போது செல்போன் மூலம் யாருடனோ பேசியுள்ளார் பிரகாஷ். அடுத்த சில
நிமிடங்களில் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பிரகாஷின் நண்பர்கள், நண்பர்
கூட்டத்தைப் பார்த்த ராணி சந்தேகமடைந்தார். நாம் போய் விடலாம் என்று
நினைத்து அவர் கிளம்ப எத்தனித்தார்.
பிரகாஷ் உள்பட நான்கு பேரும் சேர்ந்து ராணியை பலாத்காரம் செய்தனர். மேலும்,
இன்னும் 3 பேரும் அங்கு வந்து அவர்களும் இந்த அக்கிரமச் செயலில்
இணைந்தனர். 7 பேரும் சேர்ந்து ராணியை பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே
அவரை விட்டு விட்டுப் போய் விட்டனர்.
மயங்கி நிலைக்குப் போய் விட்ட ராணி, பின்னர் அக்கம் பக்கத்தினரால்
மீட்கப்பட்டார். அதன் பின்னர் அவரை மக்கள் அவனியாபுரம் காவல் நிலையம்
அழைத்துச் சென்றனர். அங்கு புகார் கொடுத்தார் ராணி. அவரை போலீஸார் அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காதலன் போல நடித்து ராணியை சீரழித்த பிரகாஷ் உள்ளிட்ட கும்பலைப் பிடிக்க
போலீஸார் தற்போது வலை விரித்துள்ளனர்.
Comments