நெல்லைக்கு தற்போது 6 எம்.பி.,க்கள்..! அதிமுகவில் வேறு யாரும் இல்லையா..?

திருநெல்வேலி: ராஜ்யசபா தேர்தலில் நெல்லைக்கு அடித்தது யோகம் என கூறும் அளவுக்கு தற்போதைய வேட்பாளர் பட்டியல் உள்ளது. கடந்த முறை ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டவர் சரவணபெருமாள். தூத்துக்குடியை சேர்ந்தவர், நெல்லையில் அரசியல் மேற்கொண்டவர்.
மாணவரணியின் மாநில செயலாளராக பதவி வகித்தார்.
அவர் மீது, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததாக செய்திகள் வெளியானதால் கடைசிநேரத்தில் எம்.பி.,பட்டியலில் இருந்து மாற்றப்பட்டார். இவர் சைவ வேளாளர் பிரிவை சேர்ந்தவர்.

மேயர் விஜிலா : எனவே இந்த முறை வேளாளர் பிரிவிற்கு ஒரு பொறுப்பை வழங்க, நெல்லை மேயர் விஜிலா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்ஐ கிறிஸ்தவ வேளாளர் பிரிவை சேர்ந்தவர். எம்.எஸ்.சி., பிஎட் பட்டதாரி. கணவர் சத்தியானந்த் பள்ளி ஆசிரியர். ஒரே மகள் ஷேரன் 11ம் வகுப்பு பயில்கிறார். விஜிலா (42) மேயர் ஆகும் வரையில், கட்சியில் துணைச்செயலாளர் உள்ளிட்ட சிறிய பொறுப்புகளில் இருந்தார். அவர் மேயரான பின்னர், நெல்லை மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது எம்.பி.,யாக்கப்படுகிறார்.

முத்துகருப்பன்: எம்.பி.,யாகும் இன்னொருவர் முத்துகருப்பன், வக்கீல். அதிமுக ஜானகி அணியின் மாவட்ட செயலாளராக இருந்தார். 1989 தேர்தலில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜா.,அணியில் போட்டியிட்டு தோற்றார். 1991க்கு பிறகு அதிமுக மாநில அமைப்பு செயலாளரானார். 2001ல் பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க., மைதீன்கானிடம் தோற்றார். 2011ல் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நெல்லை அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். ஜெ.,யை பேசிய விஜயகாந்த், தி.மு.க..,பிரமுகர்கள் ஆவுடையப்பன், மைதீன்கான் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது மகன் ஹரிஹரசிவ சங்கர், நெல்லை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார். தேவர் சமூகத்தை சேர்ந்தவர். ஒரே வீட்டில் இருவருக்கு பொறுப்புகளா என கட்சியினர் பொறுமிக்கொண்டிருந்த வேளையில் அடுத்தடுத்து ஜாக்பாட்டாக தற்போது எம்.பி.,யாகிறார்.

தடாலடிக்கு பெயர் போனவர்: தூத்துக்குடி மேயர் சசிகலாபுஷ்பா, சுமார் பத்து ஆண்டுகளுக்குமுன்பு கட்சிக்கு வந்தார். ஜெ.ஜெ.,கோச்சிங் மையம் என்ற பெயரில் ஐ.ஏ.எஸ்.,தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையம் நடத்தி வந்தார். கட்சியில் இளம்பெண்கள் பாசறையில் துணைச்செயலாளராக இருந்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி கிடைத்தது. கட்சியின் மகளிர் அணி செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். தூத்துக்குடியிலும் தமது தடாலடிக்கு பெயர் போனவர். அண்மையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த, மாநகராட்சி பெண் கமிஷனரிடம் இருந்து மைக்கை பறித்து அநாகரீகமாக நடந்துகொண்டார். அந்த சம்பவத்தை இன்னமும் உள்ளூர் மக்கள் பேஸ்புக்கில் நினைவுபடுத்துகின்றனர். இன்னொரு வேட்பாளர் சின்னத்துரை, தற்போது தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

அதிமுகவினர் சோகம்..! நெல்லையில் இரண்டு எம்.பி.,சீட்கள் கிடைத்தும் இனிப்பு கொடுத்தோ, பட்டாசு வெடித்தோ கொண்டாடவில்லை. கடந்த முறை சரவணபெருமாளுக்கு கொடுத்து பறித்தது போல, ஆகிவிடக்கூடாது என கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தனர். பார்லி., தேர்தலில் போட்டியிட முடியாத சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில்தான், ராஜ்யசபா எம்.பி.,யின் வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். ஆனால் இந்தமுறை நெல்லையில் வழங்கப்பட்டுள்ள விஜிலா (கிறிஸ்துவ வேளாளர்), சசிகலாபுஷ்பா( நாடார்), சின்னத்துரை( தலித்), முத்துகருப்பன்(தேவர்) என பார்லி.,தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் வாய்ப்பை பெற்றவர்கள்தான்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறாத மீனவர், யாதவர், நாயுடு, சிறுபான்மையினர் என பல்வேறு பிற்படுத்தப்பட்டவர்களும் அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் நீண்ட நாட்களாக உள்ளனர். கூடங்குளம் அணுஉலை பிரச்னையில் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் கடலோர மீனவ சமுதாய பிரதிகளில் ஒருவருக்கு எம்.பி.,பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் பல்வேறு கடற்புற மக்களை திருப்திபடுத்தியிருக்கலாம் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் தற்போதைய நெல்லை காங்., எம்.பி.,ராமசுப்பு, தென்காசி இந்திய கம்யூ.,எம்.பி.,லிங்கம் ஆகியோரைத்தவிர ராஜ்யசபா எம்.பி.,க்களாக தி.மு.க.,தங்கவேலு, அ.தி.மு.க.,பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆகியோருடன் தற்போது விஜிலா,முத்துக்கருப்பன் என மொத்தம் ஆறு பேராக இருப்பார்கள்.

Comments