தீ விபத்தில் இருந்து 6 பேரை மீட்டு 8 வயது சிறுவன் உடல் கருகி பலி

நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 6 பேரை உயிருடன் மீட்ட 8 வயது சிறுவன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தான்.நியூயார்க் அருகே கிழக்கு ரோச்செஸ்டர் என்ற இடத்தில் தனது உறவினர்களுடன் டைலர் துகான் என்ற 8 வயது சிறுவன் வசித்து வந்தான்.
புறநகர் பகுதியில் தனிமையில் இவர்களது வீடு அமைந்துள்ளது. இவனது வீட்டில் 57 வயதான இவனது தாத்தா லூயிஸ் பீச், 54 வயதான இவனது மாமா ஸ்டீபன் ஸ்மித் உள்பட குடும்பத்தினர் 7 பேர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்கம் போல் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்த பென்பீல்டு தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து தீ அணைப்பு அதிகாரி கிரீஸ் எம்மேயர் கூறுகையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் 8 வயது சிறுவனான டைலர் துகான் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஒவ்வொருவராக எழுப்பி, எச்சரித்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தான். 6 வதாக தனது தாத்தா லூயிஸ் பீச் என்பவரை தீயில் இருந்து மீட்டு வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்துள்ளான். இந்நிலையில் அவனது மாற்று திறனாளியான மாமா ஸ்டீபன் ஸ்மித் உள்ளே சிக்கி இருப்பது தெரியவந்தது.

தனது உயிரை துச்சமாக மதித்த அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்குள் சென்று தனது மாமாவை மீட்டு வர முயன்றான். இதில் தனது மாமாவை மீட்க முடியாமல் தீயில் சிக்கி பலியானான். தீயை அணைத்து உள்ளே சென்ற மீட்பு படையினர் உள்ளே கருகிய நிலையில் இறந்து கிடந்த டைலர் துகான் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரின் உடல்களை மீட்டனர் என்று தெரிவித்தார். 2 குழந்தைகள் உள்பட 6 பேரின் உயிரை மீட்ட சிறுவனின் செயல் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Comments