அரசு அனுமதியுடன் களை கட்டும் சேவல் சண்டை: 5,000 சேவல்கள் பங்கேற்பு

க.பரமத்தி: பொங்கல் பண்டிகையையொட்டி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, போலீஸ் பாதுகாப்புடன், சேவல் சண்டை துவங்கியது.
கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான பூலாம்வலசு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன், சேவல் சண்டை, நேற்று முன்தினம் துவங்கியது.
வரும், 16ம் தேதி வரை நடக்கும் சேவல் சண்டையில், 5,000க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்கின்றன. சேவல் சண்டை குறித்து போட்டி அமைப்பாளர்கள் கூறியதாவது: செவளை, காகம், கீரி, நூலான், வல்லூறு, மயில், பேடு உள்பட பல்வேறு சேவல் ரகங்கள் உள்ளன. போட்டியில் கரூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சண்டையில் பங்கேற்பதற்காக, சேவல்களை கொண்டு வந்துள்ளனர். சேவல் சண்டையை காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பூலாம் வலசு வந்துள்ளனர். தற்போது, நடந்து வரும் சேவல் சண்டை போட்டியில், தோற்ற சேவல்களை, வெற்றி பெற்ற சேவலுக்கு சொந்தகாரர்கள் எடுத்துச் சென்று விடுகின்றனர். இது "கோச்சா' என அழைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரவக்குறிச்சி டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்நடை டாக்டர்கள் மூலம், சண்டைக்கு செல்லும் சேவல்கள் பரிசோதனை செய்த பிறகே, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

Comments