சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் நெருங்கிய
ஆதரவாளர்கள் 5 பேர் தி.மு.க.,விலிருந்து இன்று அதிரடியாக தற்காலிகமாக
நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அழகிரி- ஸ்டாலின் உள்கட்சி மோதல் மேலும்
முற்றுகிறது.
கருணாநிதிக்கும், அவரது மகன் அழகிரிக்கும் கூட்டணி
குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்தது. இதன் காரணமாக தலைமை கழகத்திற்கு
எதிராக போஸ்டர் ஒட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மாநகர
மாவட்ட தி.மு.க., அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டது.
இதில் பொறுப்பில்
இருந்த நிர்வாகிகள் அனைவரும் பதவி இழந்தனர். வார்டு மற்றும் பகுதி
கழகத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்றும் கட்சி அறிவித்தது.
நேற்று அழகிரி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார்.
அங்கு அவர் கருணாநிதியை சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து எவ்வித
உறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில் தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன்
ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:
கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.மன்னன் ( மதுரை முன்னாள் துணை
மேயர் ) , எழில் மன்னன், முபாரக் மந்திரி, அன்பரசு இளங்கோ, பாலாஜி ஆகியோர்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 5 பேரும் கட்சியில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். இவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்
வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்
விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சா நெஞ்சருடன் இருப்போம்: இந்த நீக்கம் குறித்து பி.எம்.மன்னன் கூறுகையில்: நான் எந்தவொரு போஸ்டரும் அச்சடித்து ஒட்டிவில்லை. எனது படத்தை வேண்டுமானால் யாராவது போட்டு ஒட்டியிருக்கலாம். என் மீது ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றே எனக்கு தெரியவில்லை. தலைமை விளக்கம் கேட்டால் நாங்கள் அதற்கு பதில் அளிப்போம். எதுவாக இருந்தாலும் தலைமை எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம். கலைஞர் தாயுள்ளம் கொண்டவர். இவர் என்றும் மறப்போம் , மன்னிப்போம் என்ற கொள்கை உடையவர். எதுவாக இருந்தாலும் அஞ்சா நெஞ்சன் எங்கள் அண்ணண் பக்கமே நாங்கள் எப்போதும் இருப்போம். இவ்வாறு மன்னன் கூறினார். முபாரக் மந்திரி கருத்து தெரிவிக்கையில் , கட்சி எந்த நடவடிக்கை எடுத்தாலும் இது நல்லதற்காகத்தான் இருக்கும். இது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.
Comments