நாராயணசாமி வீடு முன் இருந்தது சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு : வெடித்திருந்தால், 30 மீட்டர் சுற்று வட்டாரம் "அவுட்'

புதுச்சேரியில், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு முன் கண்டெடுக்கப்பட்டது, சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டு; அது, வெடித்திருந்தால், 30 மீட்டர் சுற்றளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது, தெரியவந்துள்ளது. புதுச்சேரியில், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டு வாசல் முன் நிறுத்தியிருந்த காருக்கு கீழ், பைப் வெடிகுண்டு நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது; வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் ஒருவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் வீடு அருகே கிடைத்தது, ஆர்.டி.எக்ஸ்., வகை வெடிகுண்டு கிடையாது; ஆர்.டி.எக்ஸ்., அவ்வளவு எளிதாக கிடைக்க வாய்ப்பில்லை. புதுச்சேரியில் வைக்கப்பட்டிருந்தது, "டெட்டனேட்டர்'கள் கொண்டு தயாரிக்கப்பட்ட, சாதாரண நாட்டு வெடிகுண்டு தான்; ஆனால், சக்தி வாய்ந்தது. டெட்டனேட்டர்கள், பாறைகளை தகர்ப்பதற்காக, வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படுவது. வெடிகுண்டு தயாரிப்பு குறித்து அறிந்தவரே, இதை தயாரித்துள்ளார். ஆனால், வெடிகுண்டை, காருக்கு கீழே வைத்தவருக்கு, அது குறித்த விஷயம் தெரியவில்லை. அதனால் தான், திட்டம் தோல்வியடைந்துள்ளது. முக சவரத்திற்கு பயன்படுத்தப்படும், "ஜெல்' பெட்டி போன்ற ஒரு டப்பாவில், டெட்டனேட்டர்கள், இறுக்கமாக கட்டப்பட்டு, வைக்கப்பட்டுள்ளன. இதை உருவாக்கிய நபர், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவில்லை. அவர் அனுப்பிய நபர், வெடிகுண்டை காருக்கு கீழே வைத்து விட்டு, திரியை பற்ற வைத்துள்ளார். அந்த நபர், வெடிகுண்டு குறித்து அறிந்தவராக இருந்திருப்பின், பற்ற வைக்கப்படும் திரி, எவ்வளவு நேரத்தில், வெடிகுண்டை நெருங்கும், எப்போது வெடிக்கும் என்பதை கணக்கிட்டு வைத்திருப்பார். விவரம் தெரியாதவர் என்பதால், வெடிகுண்டு திட்டம், "புஸ்' ஆகிவிட்டது.இதுபோன்ற ஒரு வெடிகுண்டு, சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடுவின், திருப்பதி பயண பாதையில் வைக்கப்பட்டது. அது, அவரது கார் நெருங்கும்போது வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.அந்த சம்பவத்தில் இருந்த திட்டமிடல், புதுச்சேரி சம்பவத்தில் இல்லை; திட்டமிட்டு வெடிக்கச் செய்திருந்தால், 30 மீட்டர் சுற்றளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Comments