பாய்ந்த காளைகள்... பதுங்கிய கட்டிளங்காளைகள்..! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், ஆறு மணி நேரம் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 30 வீரர்கள் காயமடைந்தனர்.

கோர்ட் தெரிவித்த விதிமுறைகள்படி, மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் நேற்று இந்த ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை சீறிப்பாய்ந்த காளைகளை, சினந்து அடக்கிய காளையர்களும் 'ஆடுகளம்' கண்டது மெய்சிலிர்க்க வைத்தது.
இந்நிகழ்ச்சிக்காக, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டில், குருநாதசுவாமி கோயில் அருகே மேடையும், வாடிவாசலும் அமைக்கப்பட்டிருந்தது. மதுரை உட்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 501 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அவற்றை அடக்க 300க்கும் மேற்பட்ட இளைஞர்களும் பதிவு செய்திருந்தனர். ஆனால், நேற்று 456 காளைகளே வந்திருந்தன. விதிமுறையை பின்பற்றாத 2 காளைகள் நிராகரிக்கப்பட்டன. காளைகளும், காளையர்களும் மருத்துவ பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தையும், கூச்சலையும் கண்டு மிரண்ட காளைகள், நாலுகால் பாய்ச்சலில் வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்தன. இளைஞர் கூட்டம் திமிலையும், கொம்பையும் பிடித்து அடக்க முயற்சித்தது. மாட்டின் மீது பலர் தொங்கினர். ஆனால் அவை, ஆவேசத்துடன் பாய்ந்து, வீரர்களை தூக்கிய வீசியபடி 'சிட்டாய்' பறந்தன. காளைகளை பிடிக்க முயன்ற 30 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கியவர்களுக்கு உடனுக்குடன் பரிசு வழங்கப்பட்டது. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டன. மொத்தம் 389 காளைகள் களமிறக்கப்பட்டன. நிகழ்ச்சியில், கலெக்டர் சுப்ரமணியன், மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன், மதுரை ஆர்.டி.ஓ., ஆறுமுகநயினார், ஏ.கே.டி.,ராஜா எம்.எல்.ஏ., தெற்கு தாசில்தார் கங்காதரன், சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகள்:

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையொட்டி, அவனியாபுரம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வீரர்களுடன் 'விளையாடிய' காளை!

* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்து மெயின்ரோடு வரை இருபுறமும் தடுப்புக் கம்புகள், கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது. போலீசாரின் கண்காணிப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

* களம் கண்ட காளைகளை பிடிக்க, தடுப்புக் கம்புகளுக்கு இடையே உரிமையாளர்கள் கயிறுகளுடன் ஓடிவந்தனர். இப்படி பலர் வந்ததால், மிரண்ட காளைகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி பாய்ந்து, வீரர்களை மிரளவைத்தன.

* பரிசுப் பொருட்களாக சாதாரண டிபன் பாக்ஸில் இருந்து கட்டில், பீரோ, மின்விசிறி, மிக்ஸி, சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன.

* மேடைக்கு கீழ் குவிந்திருந்த வீரர்களின் மேல் தாவி ஏறி 'நர்த்தனம்' புரிந்த கருமயிலைக் காளையொன்று, மீண்டும் மீண்டும் வந்து அவர்களை மிதித்து 'விளையாடிச்' சென்றது.

* ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லெஸ்லி பார்னர் என்பவர் கூறுகையில், ''இதுவரை இதுபோன்ற விளையாட்டை பார்த்ததில்லை. தமிழர் கலாச்சாரம் வீரமும், வேடிக்கையும், வினோதமும் நிறைந்ததாக உள்ளது. அடுத்த ஆண்டும் இங்கு வருவேன்,'' என்றார்.

Comments