டேராடூன்: ராணுவத்திற்கு ஆள் எடுத்த விஷயத்தில் பல மோசடிகளை செய்து, 50
பேரை பணியமர்த்திய ராணுவ துணை தளபதிகள் மூன்று பேர் உள்ளிட்ட பலர்
சி.பி.ஐ., பிடியில் சிக்கி உள்ளனர்.
டேராடூன், இந்திய ராணுவ
அகாடமியில், கடந்த 2011-12ம் ஆண்டு, சி மற்றும் டி பிரிவு பணிக்கான ஆட்கள்
தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்ததை
தொடர்ந்து, மத்திய புலனாய்வு குழுவான சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை
நடத்தியது. இதில், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், தொடர்ந்து
விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள்
கிடைத்தன. இந்திய ராணுவத்தில், துணை தளபதி அந்தஸ்தில் உள்ள மூன்று
அதிகாரிகள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். லெப்டினன்ட் அகிலேஷ்
மிஸ்ரா, ஜகதீஷ் பிஷ்நோய், அம்பரீஷ் திவாரி ஆகிய அந்த மூவரும், போலி அனுபவ
சான்றிதழ்கள் மற்றும் தேர்வு விடைத்தாளில் மோசடி என்ற வகையில் 50 பேரை
பணியில் சேர்த்துள்ளனர்.
சி.பி.ஐ., வழக்கு பதிவு :
இதைத்
தொடர்ந்து, மூன்று துணை தளபதிகள் மீதும் ஏமாற்றுதல், சதி செய்தல், போலி
சான்றிதழ் தயாரித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சி.பி.ஐ., வழக்கு பதிவு
செய்துள்ளது. மேலும், மூன்று ராணுவ அதிகாரிகளிடமும் முறைப்படி விசாரணை
நடத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தமோசடிக்கு உதவிய சில
ராணுவ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments